July 30, 2010

உம்மி நபியை மாமேதையாக்கியது எது?  பகுதி 02
பாத்திமா ஷஹானா கொழும்பு.
 

முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவன். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.

சிலர் இவ்விஷயத்தில் முரண்படுகின்றனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று சொல்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இது முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகின்றனர். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். இப்படிக் கூறுபவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே கூறுகின்றனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் தரக் குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேன்மையையே ஏற்படுத்தியது.

அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களே இட்டுக்கட்டி உள்ளனர் என நினைப்பர். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர்.

“இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)

அதுமட்டுமில்லாது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஞீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்……… (அல்குர்ஆன் 7:157)

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)

எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்தன.

குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்திலும் பார்க்க விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் யதார்த்த நிலையை உணர்வான். குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சளிப்பு எற்படுவதில்லை. அல்குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் ஒவ்வொரு எழுத்திற்கும் 10 நன்மையைத் தருகின்றான். அப்படியாயின் அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால் அல்லாஹ் எவ்வளவோ நன்மைகளை எமக்கு அருளுவான்.

அநேகமானோரின் வீடுகளில் குர்ஆன் காட்சிப் பொருளாகவே இருக்கின்றது. தூசி துடைத்து வைப்பார்களே ஒழிய திறந்து பார்ப்பது கூட இல்லை. குர்ஆன் வீட்டில் இருந்தால் சரி. அதன் போதனைகளை அறிய ஒரு துளியளவேனும் ஆர்வம் இல்லை. முதலில் குர்ஆன் எதற்காக அருளப்பட்டது என்பது கூட தெரியாத முஸ்லிம்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இது வேதனைப்பட வேண்டிய விஷயம்.

அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.

இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.