December 13, 2010

காத்தான் குடி படுகொலைக்கும் தனக்கும் தொடா்பில்லையாம் (?).

அமைச்சர் விநாயக மூர்தி முரளிதரன் சொல்வது உண்மையா?
RASMIN M.I.Sc
(பி.பி.ஸி உலக சேவையில் வெளியிடப் பட்ட செய்தியை அடிப்படையாக வைத்து இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது).

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கை அரசு வெற்றி பெற்றது உலகறிந்த உண்மை.

யுத்த காலங்களிலும்,இறுதி யுத்தத்தின் போதும் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக வேகமாக விசாரனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரனைகளின் போது பல தரப்பட்ட மக்களும் விசாரிக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

இதில் இறுதியாக இலங்கை அரசின் தற்போதைய அமைச்சரும் கடந்த கால விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலபதிகளில் ஒருவருமான விநாயக மூர்த்தி முரளிதரன் சாட்சியமளித்துள்ளார்.

அதில் அவா் சொன்ன சாட்சியங்களை பி.பி.ஸி உலக சேவை தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது.அந்தச் செய்தி இதுதான்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்று இலங்கை அமைச்சரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


மேற்கண்ட செய்தியில் மிக முக்கியமான பல தகவல்களை முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

முரளிதரன் அவா்களின் சாட்சியத்தையும் அதற்குறிய விமர்சனத்தையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சாட்சியம் – 01

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி பிரேமதாஸாவையும்,இந்திய பிரதமர் ராஜுவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப் பெரும் தவறு என்றும்,அந்த முடிவையும் பிரபாகரனும்,பொட்டு அம்மானும் தான் எடுத்திருப்பார்கள் என்றும் தான் கருதுவதாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.

விமர்சனம்.

தனக்கும் மேற்கண்ட படுகொலைகளுக்கும் தொடா்பில்லை என்பதை நிலை நிறுத்த வந்த விநாயகமூர்தி முரளிதரன் அவா்கள் நிலை தடுமாறியுள்ளதை மேற்கண்ட செய்தி சொல்கிறது.

அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பில் பொட்டு அம்மான் எப்படி ஒரு முக்கிய தளபதியோ அதே போன்ற ஒரு விதத்தில் அதை விட மேல் இடத்தில் இருந்த தளபதிகளில் ஒருவா் தான் இந்த முரளிதரன் என்கின்ற கருணா அம்மான்.

படுகொலை நடக்கும் தருணத்தில் அவர் விடுதலைப் புலிகளுடன் தாய்,பிள்ளையாகத் தான் இருந்தார்.அப்படியிருக்கையில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தற்போது கூறும் இவருக்குத் தெரியாமல் அந்தத் தாக்குதல்கள் நடந்திருக்குமானால் அதையே காரணமாக காட்டி அவா் இயக்கத்தை விட்டும் பிரிந்திருக்களாம்.ஆனால் அப்படி செய்யவில்லையே?

இப்போதுதான் அந்த காரணங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா விநாயக மூர்த்தி அவா்களே?

சாட்சியம் – 02

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமானதொரு அமைப்பாகும் அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனம்.

எந்த ஒரு ரகசிய அமைப்பாக இருந்தாலும் அதில் என்ன நடக்கிறது என்பது அதில் உள்ள அடிமட்ட தொண்டனுக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்,ஆனால் உயர்மட்ட தலைவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லையே?

சாட்சியம் – 03

இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும்  முரளிதரன் கூறியுள்ளார்.

விமர்சனம்.

ராஜுவ் காந்தியை கொள்வதற்குக் காரணம் எதுவென்று ஊகித்துச் (?) சொல்லியிருக்கும் முரளிதரன் அவா்கள் இந்திய ராணுவம் பலரைக் கொன்றதற்காகவும்,பல பெண்களை கற்பழித்ததற்காகவுமே ராஜுவ் காந்தியை கொள்ளும் முடிவை விடுதலைப் புலிகள் எடுத்திருக்களாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் மேற்கண்ட வார்த்தையில் உறுதி தெரியவில்லை.

அப்படியும் இருக்களாம் அதற்கு மாற்றமாகவும் இருக்களாம்.

ஆனால் அவர் அடுத்து சொல்லியுள்ள வார்த்தை இன்னுமோர் சந்தேகத்தினை உண்டு பண்ணுகிறது.

அதாவது இந்திய ரானுவத்தினால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவும் அவா் குறிப்பிடுகிறார்.

ஆரம்பத்தில் அப்படி இருக்களாம் என்று சந்தேகத்துடன் தெரிவித்தார்,அதே போல் தனக்கும் மேற்குறிப்பிட்ட தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு ரகசியமான அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இருதியில் யாரை வைத்து தாக்குதல் நடத்தப் பட்டது என்பதை தெளிவாக கூறியுள்ளார்.

இதில் எது உண்மை?

தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றால் யாரை வைத்துத் தாக்குதல் நடத்தினார்கள் என்ற விபரம் முரளிதரனுக்கு எப்படித் தெரிந்தது?

இல்லையில்லை தனக்கும் அதில்  தொடர்பிருக்கிறது என்று முரளிதரன் கூற முன்வருவாரெனில் அப்படியிருக்களாம்,இப்படியிருக்களாம் என சந்தேகத்திற்கிடமான வார்த்தைகள் மூலம் முரளிதரன் யாரை ஏமாற்ற நினைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

சாட்சியம் – 04

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
விமர்சனம்.

காத்தான் குடி முஸ்லீம்கள் படுகொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று தற்போது சாட்சியம் கூறியுள்ளார் முரளிதரன்.

ஆனால் குறிப்பிட்ட படு கொலை நடக்கும் நேரத்தில் இந்த முரளிதரன் விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாகத் தான் இருந்தார் என்று நினைக்கிறேன்.

எந்தப் பகுதிக்கு தான் பொருப்பாக இருக்கிறோமோ அந்தப் பகுதியில் மிகப் பெரும் தாக்குதல் ஒன்று நடக்கிறது.அது தனக்குத் தெரியவில்லை என்றிருந்தால் அன்றைக்கே அவா் இது தொடர்பில் இயக்கத்தில் முறைப்பட்டிருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் அவரின் இயக்கப் பிரிவினைக்கு இதுவே காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் அன்றைக்கு இது தொடர்பாக வாய் திறக்காதவா் இன்று விடுதலைப் புலிகளை விட்டும் பிரிந்ததன் பின்னால்,புலிகள் தோற்கடிக்கப் பட்டு முழு நாடும் அரசின் கட்டுப் பாட்டுக்குள் வந்ததின் பின்னால் இந்த புதிய கதையை சொல்வதென்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒரு சமுதாயத்தின் வணக்கத் தளத்திலேயே வைத்து அவா்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிவிட்டு இப்போது தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று அரசியல் லாபம் தேட முனைவதென்பது முழுப் புசனிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதற்கு ஒப்பானதாகும்.

காத்தான் குடித் தாக்குதல் ஒன்றும் செவிடன் காதில் ஊதிய சங்கு அல்ல.
முழு முஸ்லீம்களினதும் இதயத்தைத் தாக்கிய அம்பு.

காரணம் சொல்லி அரசியல் லாபம் தேடும் அரசியல் பச்சோந்திகளுக்கு விலை போவதற்கு முஸ்லீம்கள் ஒன்றும் இருண்ட கண்டத்தில் இல்லை.

தெளிவான மார்கத்தில் சரியான புரிதலுடன் முறையான அனுகுமுறைகளை கையாண்டு வருகிறார்கள் என்பதை இனியாவது முரளிதரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சரியான தருனத்தில் முறையான உத்வேகத்துடன் யுத்தத்தை முன்னெடுத்து இறைவனி உதவியினால் நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் நிம்மதியை பெற்றுத் தந்த ஜனாதிபதியவா்கள் யுத்த காலங்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து கொண்டு மக்களை கொலை செய்யக் காரணமாக இருந்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு சரியான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும்,குறிப்பாக காத்தான் குடி சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை நீதி மன்றத்தின் மூலம் ஜனாதிபதியவா்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்,பெற்றுக் கொடுப்பார்கள் என்று முஸ்லீம்கள் உறுதியாக நம்புகிறார்கள். வேண்டுகோள் விடுக்கிறார்கள்.



No comments: