January 12, 2011

 ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 04)
M.I.Sc

அன்பின் இணையதள வாசகர்களே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்னஎன்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில் பகிர இருக்கும் விஷயம் என்னவெனில்,நமக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் சிலர் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஜின் விஷயத்தில் மிகவும் பாரதூரமானமார்க்கத்திற்கு முரனான,சிந்தனைக்கு சிறிதளவும் தொடர்பில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

ஜின்களைப் பற்றி பேசுவவர்களும்இணைய தளங்களில் எழுதுபவர்களும் ஜின்கள் பற்றிய உண்மைக் கருத்துக்களை திருமறைக் குர்ஆன்,மற்றும் நபியவர்களின் சுன்னா வழியில் எடுத்துச் சொன்னால் பிரச்சினை இல்லை.ஆனால் சிலரோ நபியவர்களின் சுன்னாவின் கருத்தை தங்கள் கருத்துக்கு சாதகமான வலைத்து,திருப்பி வைத்துக் கொண்டு ஜின்களை வசப்படுத்த முடியும்,ஜின்கள் நமது உடலுக்குள் புகுந்து பிரச்சினைகளை,சிக்கள்களை உண்டாக்கும் வல்லமை மிக்கவை போன்ற குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான,ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்வதுடன்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒரு தெளிவை தருவதற்காகவே இந்தத் தொடர் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.

இனி ஜின்கள் பற்றிய நான்காவது பகுதியை ஆராய்வோம்.


ஜின்களால் மனித உடலில் நோயை உண்டாக்க முடியுமா?

ஜின்களைப் பற்றிய இந்தத் தொடரில் இதுதான் மிகவும் முக்கியமாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய பகுதியாகும். அதாவது ஜின்கள் மனித உடலில் புகுந்து மனிதர்களை நோயாளியாக்க முடியுமா ? முடியாதா? என்பதை நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் நமக்கு மத்தியில் பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் ஜின்கள் மனிதனுக்கு நோய்களை உண்டு பண்ணி அவனை படுக்கையில் போட்டுவிடும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் அவா்களுக்கு சாதகமாக திருமறை வசனங்களையும்,ஹதீஸ்களையும் வளைத்துத் திரித்துக் கொள்கிறார்கள்.

திருக்குா்ஆனையும்,நபி்மொழிகளையும் நாம் ஆராயும் போது அவா்கள் சொல்வது வடிகட்டிய பொய் என்பதையும்,இது சுயலாபத்திற்கான அவா்களின் வாதம் என்பதையும் நன்றாகவே அறிய முடிகிறது.

இனி விஷயத்திற்கு வருவோம். 

நபி (ஸல்) அவர்கள் உட்பட ஜின் இல்லாத மனிதர் உலகில் ஒருவருமில்லை. விஷயம் இவ்வாறிருக்க குறிப்பிட்ட சிலரிடம் ஜின் இருப்பதாகவும் மற்றவர்களிடம் ஜின் இல்லை என்றும் நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையாகும்.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை'' என்று கூறினார்கள். அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5421)

எல்லோரிடத்திலும் இருக்கின்ற ஜின் கெட்ட செயலை ஏவுவதைத் தவிர வேறு எந்த தீங்யும் மனிதர்களுக்கு செய்ய முடியாது. இதை இந்த ஹதீஸின் பிற்பகுதி விளக்குகிறது.  என்னிடத்தில் உள்ள ஜின் எனக்கு நல்லதை மட்டுமே ஏவுவான் என்று நபி (ஸல்) அவர்கள் தனக்கும் மட்டும் உரிய தனிச்சிறப்பாக இதை கூறுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்களை தவிர்த்து மற்றவர்களிடத்தில் உள்ள ஜின் கெட்டதை ஏவுவான் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுக்க முயற்சி செய்வது மட்டுமே ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு என்பதை பல குர்ஆன் வசனங்கள் விளக்குகிறது. 

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த விபரத்தைத் தாண்டி ஜின் பைத்தியத்தையும் நோயையும் அபரிமிதமான ஆற்றலையும் ஏற்படுத்தி உளற வைக்குமென்று நம்புவதற்கு பொய்யைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

மேற்கண்ட ஹதீஸில் ஷைத்தானைத் தான் ஜின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷைத்தானால் எந்த தீங்கை செய்ய முடியும்? எவற்றை செய்ய இயலாது? என்று ஷைத்தானைப் பற்றி விவரிக்கும் போது  விரிவாக நாம் விளக்கி இருக்கிறோம். அங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் ஜின் வந்து ஆடுவதாக கூறப்படும் கற்பனையை தவிடுபொடியாக்குகிறது.

ஜின்கள் விஷயத்தில் பயப்படுவது அறியாமையாகும்.

எந்த ஒரு தீங்கும் இறைவனுடைய நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது. இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதிய வைத்துக்கொண்டால் கோழையாக மாட்டான். அஞ்சக்கூடாத படைப்புகளுக்கு அஞ்சமாட்டான். 

ஜின்களுக்கு வழங்கப்படாத அதிகாரங்கள் இருப்பதாக நினைத்து ஒருவன் ஜின்களுக்கு பயப்படுவது மூடநம்பிக்கையாகும். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நாம் பயந்து வாழ வேண்டும். 

ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் (3 : 175)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!
அல்குர்ஆன் (3 : 102)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
அல்குர்ஆன் (9 : 18)

 அனைவரிடமும் இருக்கிறான்.

நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து ஷைத்தான் எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை. அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதை புறக்கணித்துவிடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள். 

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்' என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்' என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5422)

எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையை பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு பைத்தியமோ பலவீனங்களோ நோய்களோ ஏற்படும் போது அவர்களிடத்தில் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள். 

ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.

ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏறபடுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

உடலில் இரண்டரக் கலந்திருக்கிறான்.

ஷைத்தான் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்றக் கருத்தை பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
நூல் : புகாரி (2035)

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருந்தது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறக்கலானேன். இதை (அடிக்கடி) நான் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகன் (உஸ்மானா?) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறந்துவிடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு அருகில் வா என்றார்கள். நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்துகொண்டேன். அவர்களது கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு உன் பணியை துவங்கு என்று (என்னிடம்) கூறினார்கள். 
நூல் : இப்னு மாஜா (3538)

அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஷைத்தான் உஸ்மான் என்ற இந்த நபித்தோழரின் உடலில் இருந்து கொண்டு தொழுகையில் கவனத்தைத் திருப்பும் வேலையை செய்துள்ளான் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. 

ஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம். 

ஆனால் சிலரோ மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி ஷைத்தானை நபியவா்கள் வெளியில் போகச் சொன்னதிலிருந்து அவன் அந்த நபித்தோழரின் உடலில் இருந்து கொண்டு அவருக்கு உடலியல் பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளான் என்பதுதான் அதில் உள்ள உண்மை நிலை என்று பாமர மக்களை குழப்புகிறார்கள்.

அந்தச் செய்தியை படிக்கும் எவறுக்கும் அதன் உண்மைத் தன்மை தெளிவாக விளங்கும் ஷைத்தான் அந்த நபித்தோழரின் தொழுகையை திசை திருப்ப முற்பட்டதையும் நபியவா்கள் அதற்காகத்தான் அந்த வாசகத்தை பயன்படுத்தினார்கள் என்பதையும் நியாயமாக சிந்திப்பவா்கள் விளங்கிக் கொள்வார்கள். 

ஷைத்தானால் ஏற்படும் தீங்கு. 

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையானக் காரியங்களை புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் சைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள். 

மனிதன் தான் சைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானேத் தவிர சைத்தான் யாரையும் வழுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானேத் தவிர நன்மையான காரியங்களை செய்யவிடாமல் சைத்தான் யாரிடத்திலும் சண்டைக்குவர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளை காட்டுவதும் தான் சைத்தானுடைய வேலை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். 

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
அல்குர்ஆன் (114 : 5)

அதிகபட்சமாக ஷைத்தானால் என்ன செய்ய முடியும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5419)


ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப்போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை சைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் சைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் சைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 

சைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)

"எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் சைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் (17 : 65)

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (34 : 21)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டால் சூனியம் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 

சூனியம் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாக பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகிறது. 

ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்.

கெட்டக் காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது. அடுத்து வரக்கூடிய தலைப்புகளுக்கு இந்த விஷயத்தை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருப்பதால் இங்கே இது தொடர்பான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம். 

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் (5 : 90)

மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான். 

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.
அல்குர்ஆன் (18 : 63)

மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலிலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (2718)

ஆண்களைக் கவரும் வகையில் பெண்களின் தோற்றம் இருப்பதால் அதற்கு ஷைத்தானுடைய தோற்றம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் பெண்களின் உருவம் ஷைத்தானுடைய உருவமா? என்றால் நிச்சயம் கிடையாது. மனதில் சபலத்தை பெண்களின் தோற்றம் ஏற்படுத்துகின்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. 

இன்ஷா அல்லாஹ் ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு இறுதித் தொடர் நாளை.........No comments: