March 24, 2011

தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 04)
ஸஹாபாக்களை பின்பற்றுவதும் வழிகேடே ! (பகுதி இரண்டு)
RASMIN M.I.Sc
( தக்லீத் ஓா் ஆய்வு என்ற பெயரில் நாம் எழுதி வந்த தொடர் ஆக்கத்தை சில நாட்களாக வெளியிட முடியாமல் போனது. வாசகர்கள் பலர் தொடரை மிண்டும் எழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க இன்றிலிருந்து அதன் தொடர் வெளியிடப்படுகிறது. -  ரஸ்மின் M.I.Sc )


நபித்தோழர்களின் சிறப்புகள்.

நபித்தோழர்கள் நம்மை விட சிறப்பானவர்கள், நன்மையில் முந்தியவர்கள், ஈமானில் சிறந்தவர்கள் என்பதில் நமக்கு அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு குா்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏறாளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.

நபித் தோழர்களைப் புகழ்ந்து பேசும் இறைவன் அவா்கள் என்றென்றும் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (அல்குர்ஆன் 9:117)

ஸஹாபாக்களின் வள்ளல் தன்மையை இறைவன் பாராட்டிப் பேசுகிறான்.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)

நபித் தோழர்கள் சிலர் சில சந்தர்ப்பங்களில் சில தவறுகளை செய்திருந்தாலும் அவா்களை திட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கும் அவா்கள் செய்த சேவைக்கும் உள்ள வித்தியாசம் மலையையும், மடுவையும் போன்றதாகும்.

தங்களுடைய வாழ்வாதார தேவையையை முழுமைப்படுத்துவதற்கு சிறமப்பட்ட நேரத்திலும் அடுத்தவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் தான் நபித் தோழர்கள்.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)  நூல்: புகாரி 3673

மக்களில் சிறந்தவர்கள் யார் என்ற பட்டியலை நபியவர்கள் தெரிவிக்கும் போது முதலிடத்தை நபித் தோழர்களுக்கே வழங்குகிறார்கள்.

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)      நூல்: புகாரி 2651

இவ்வளவு சிறப்பு மிக்கவர்களான நபித் தோழர்களை யாரும் திட்டவோ, நிந்திக்கவோ கூடாது. அவா்களின் சிறப்புக்களை மறுக்கவும் கூடாது.

ஸஹாபாக்களை வஞ்சிக்கும், அவா்களின் சிறப்புக்களை மறுக்கத் துணியும் ஷீயாக்கள் மற்றும் அவா்களுக்கு வக்காலத்து வாங்கும் அமைப்புக்களை நாம் ஒரு போதும் விடப்போதவில்லை.

இந்த கெட்ட எண்ணம் குடி கொண்ட இஸ்லாமியப் பெயர் தாங்கிக் கயவர்களை நாம் மக்கள் மன்றில் அடையாளம் காட்டியே ஆகவேண்டும்.

இதே நேரம் ஸஹாபாக்கள் இவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள், அவா்களை இறைவன் குா்ஆனிலே புகழ்ந்திருக்கிறான், நபியவர்கள் தனக்குப் பின் சிறந்தவர்கள் என்று ஸஹாபாக்களைத் தான் அடையாளம் காட்டியுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கமாக ஆகும்.

நபித் தோழர்களையும் பின்பற்ற முடியும், அவா்கள் செய்த காரியங்களும் மார்க்கமாக மாறும் என்று யாராவது வாதிட்டால் அவருடைய வாதம் வழிகேட்டிற்கு நம்மை அழைக்கும் வாதம் என்று நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் ஸஹாபாக்கள் நம்மை விட சிறந்தவர்கள், ஈமானில் முந்தியவர்கள் என்பதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் நல்லவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம் அவா்களுக்கெதிரான கருத்துக்களை சொல்பவர்களுக் கெதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம் ஆனால் அவா்களை பின்பற்ற முடியாது, பின்பற்றவும் கூடாது.

திருமறைக் குா்ஆனையும், நபியவர்களின் பொன் மொழிகளையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும்.

நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.ஏற்பட்டுத்தான் இருக்கிறது.

நபித் தோழர்களிடம் தவறுகள் ஏற்பட்டன என்று நாம் கற்பனையாக கூறவில்லை. மாறாக தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம்.

நபித் தோழர்கள் குா்ஆன், சுன்னாவைத் தாண்டி செய்த காரியங்கள் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். 

ஆய்வு தொடரும்...................

கடந்த தொடர்களைப் பார்க்க :

No comments: