May 26, 2011

நுனிப்புல் மேய்பவர்கள் யார்?  
மவ்தூதியின் பக்கவாத்தியங்களுக்கு வரிக்கு வரி பதில்.
 RASMIN M.I.Sc

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மே மாத அழைப்பு இதழில் தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு ஆக்கம் வெளியிடப்பட்டது.

அதே ஆக்கம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இணையதளத்திலும், எனது தளத்திலும் வெளியிடப்பட்டது வாசகர்கள் அறிந்ததே.

குறிப்பிட்ட ஆக்கத்திற்கு வரிக்கு வரி பதில் தர வேண்டியவர்கள் அப்படி செய்வதை விட்டுவிட்டு நம்மை பார்த்து நுனிப்புல் மேய்பவர்கள் என்று தலைப்பிட்டு புல்லின் மேல் விழுந்திருக்கும் பணியை நக்கும் வேலையைப் பார்த்ததுதான் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

சரி இனி அவர்கள் பதில் என்ற பெயரில் எழுதியிருக்கும் ஆக்கத்திற்குறிய நமது பதிலைப் பார்ப்போம்.

)இப்போது நாம் எழுதும் இந்த பதிலில் கூட அவர்கள் வெளியிட்ட அனைத்து வாதத்திற்கும் வரிக்கு வரி நாம் பதில் தருவோம் தங்கள் கருத்தில் உண்மையானவர்களாக இருந்தால் நமது முதல் ஆக்கத்திற்கும் இதற்கும் அவர்களும் வரிக்கு வரி பதில் தர வேண்டுகிறோம்.)

பக்கவாத்திய வாதம் 01

தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாகிவிட்ட நிலையாகிவிட்டது இன்றைய தஃவாக் களம். அல்-குர்ஆனையும்> சுன்னாவையும் அதன் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ளத் தெரியாத பலர்> சில ஒன்லைன்களை தமது முதற்தர சட்ட மூலாதாரமாக்கிக் கொண்டு தீர்ப்புக்களையும்> தீர்வுகளையும்> விமர்சனங்களையும் அள்ளி வீசுவதையே தஃவா என்று எண்ணிச் செயற்படுகின்ற அவலநிலையே இன்றைய தஃவாக் களத்தில் காண முடிகின்றது. 

இவர்களின் இத்தகைய விமர்சனங்களுக்கு மறுப்பெழுதி> இஸ்லாமிய சமூக மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் நேரத்தை வீணடிக்காதிருப்பதும்> மனஸ்தாபங்களை வளர்க்காதிருப்பதுமே சிறந்தது என்ற வழிமுறையை இயக்கம் எமக்குக் கற்றுத் தந்திருந்தாலும் தொடர்ந்தேர்ச்சையான இவர்களின் இச்செயல்கள் அறியாமையா?> வீம்பா?> அல்லது மறை கரங்களின் சதியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

சத்தியத்தைச் சொல்வதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் எப்படி செய்திகளை புனைகிறார்கள்?> திரிபுபடுத்துகிறார்கள்? என்பதை நடுநிலையாக சிந்திக்கின்றவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

நமது பதில்

இந்திய ஜமாத்தே இஸ்லாமியின் மாத இதழான சமரசம் என்ற பத்திரிக்கையில் வெளிவந்த கேள்வி பதில் பகுதியில் தஜ்ஜாலைப் பற்றி மவ்தூதியிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு மவ்தூதி கொடுத்த பதிலை அடிப்படையாகக் கொண்டு நமது ஆக்கம் எழுதப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அந்த ஆக்கத்திற்கு பதில் தருவதாக இருந்தால் நாம் வைத்திருக்கும் அனைத்து வாதங்களுக்கும் முதலில் பதில் சொல்லியிருக்க வேண்டும் ஆனால் பத்திரிக்கை தர்மம் பேசும கட்டுரையாளர் அதைப் பின்பற்றாதது ஏனோ தெரியவில்லை.

பதில் இல்லையென்பதினாலா அல்லது இயக்க பக்தியினாலா?

இரண்டாவது நமது விமர்சனங்களுக்கு மறுப்பெழுதி இஸ்லாமிய சமூக மாற்றத்தை நோக்கிய தமது பயணத்தில் நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காகவும், மனஸ்தாபங்களை வளர்க்காமல் இருக்க வேண்டும் என்ற தங்க் இயக்கம் தங்களுக்கு கற்றுக் கொடுத்த வழிமுறைக்காகவும் இவர்கள் இது வரை வாய் திறக்காமல் இருந்ததாகவும், ஆனால் நாம் அசத்தியத்தை சொல்வதாக தெரிந்தவுடன் பொருக்க முடியாமல் பதில் எழுத வந்ததாகவும் சொல்லியுள்ளார்கள்.

உண்மையில் நாம் அசத்தியத்தைத் தான் சொல்கிறோம் என்றால் இது வரைக்கும் ஜமாத்தே இஸ்லாமி தொடர்பாக எத்தனையோ ஆக்கங்கள் நமது பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது, எனது தளத்தில் எழுதப்பட்டது அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முன்வராதது ஏன்?

இதற்கு முன் வந்த எந்த ஆக்கத்திற்கும் பதில் தர முன்வராமல் அதிலும் குறிப்பாக ஜமாத்தே இஸ்லாமிக்கும் ஷீயாக்களுக்கும் நேரடித் தொடர்பு பற்றியெல்லாம் வெளியிடப்பட்ட ஆக்கங்களுக்குக் கூட பதில் தராதவர்கள் இதற்கு மட்டும் பதில் என்ற பெயரில் ஒன்றை எழுதியுள்ளார்கள் என்றால் என்ன காரணம்?

இதற்கு முன்னால் எழுதிய எந்த ஆக்கத்திற்கும் இவர்களிடம் பதில் இல்லை. இல்லவே இல்லை. தைரியம் இருந்தால் அதற்கும் பதில் எழுதட்டும் பார்க்களாம்.

அபுல் அஃலா விஷயமாக நாம் அசத்தியத்தை சொல்வதாகவும், திரிபுபடுத்துவதாகவும் சொல்லும் இவர்கள் அதனை முழுமையாக நிரூபித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

பக்கவாத்திய வாதம் 02

இலங்கை தௌஹீத் ஜமாஅத் வெளியிடும் மாத இதழான 'அழைப்பு' அண்மையில் 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இக்கட்டுரையில் மௌலானா மௌதூதி மீது பின்வரும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

1)
தஜ்ஜாலின் வருகையை மௌதூதி மறுக்கிறார்.

2)
நபியவர்கள் வஹியின் அறிவில்லாமல் தஜ்ஜால் பற்றி அறிவித்துள்ளார்கள் என்று கூறி மௌதூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்.

கடந்த ஏப்ரல் (20111-15) மாத சமரசம் (இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் சஞ்சிகை) இதழில் வெளியான 'எங்கே தஜ்ஜால்?' என்ற கட்டுரையை ஆதாரமாக வைத்தே இக்குற்றச் சாட்டுக்களை இவர்கள் முன்வைக்கின்றனர்.

இனி விடயத்திற்கு வருவோம். உண்மையில் மௌலானா மௌதூதி அவர்கள் தஜ்ஜாலின் வருகையை மறுக்கின்றாரா?> அச்சிந்தனையில்தான் ஜமாஅத்தே இஸ்லாமி செயற்படுகின்றதா? என்றால் அது உண்மையல்ல.

நமது பதில்

மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுப்பதாக நாம் எடுத்தெழுதிய செய்திகள் உண்மையல்ல என்றும் ஜமாத்தே இஸ்லாமி அந்த சிந்தனை கொண்டதுமல்ல என்றும் கட்டுரையாளர் வாதிடுகிறார்.

தஜ்ஜால் பற்றி மவ்தூதி சொல்லாத ஒரு கருத்தை நாம் சொல்லியிருக்கிறோம் ஜமாத்தே இஸ்லாமி மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியிருக்கிறோம் என்றால் அதனை நாம் விடுத்த பகிரங்க விவாத அழைப்பை ஏற்று விவாதக் களத்தில் வந்து நிரூபித்து சென்று விட வேண்டியதுதானே ஏன் இந்த மழுப்பல், சொதப்பல் பதில்கள் எல்லாம்?

பக்கவாத்திய வாதம் 03

இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையை இவர்கள் திறந்த கண்களோடு வாசித்திருந்தால் இப்படியான ஒரு பொய்யை புனைந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் இவர்கள் குரோதம்> காழ்ப்புணர்வு என்ற கருப்புக் கண்ணாடியணிந்தே இக்கட்டுரையை வாசித்திருக்க வேண்டும். 

நமது பதில்

நாம் கருப்புக் கண்ணாடி போட்டோமா அல்லது வெறும் கண்ணோடு பார்த்தோமா என்பதற்கு முன் நீங்கள் மார்ச் மாத இதழையும் சேர்த்து இரண்டு சமரச இதழ்களையும் மீண்டும் ஒரு முறை படியுங்கள் என்பதே நமது முதல் வேண்டுகோள்

நீங்கள் அங்கங்கு தொட்டுத் தொட்டு மவ்தூதியின் கருத்துக்களை தூக்கிக் காட்டி வக்காலத்து வாங்குவீர்கள் என்பது நாம் எதிர்பார்த்தது தான் அதே நேரம் ஒரு சமரசம் பத்திரிக்கையை வைத்துத்தான் நீங்கள் பேசுவீர்கள் என்பதும் மற்றையதை நாம் பார்திருக்க மாட்டோம் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பதும் நாம் எதிர்பார்த்ததே.

நாம் கருப்புக் கண்ணாடி போட்டாவது வாசித்தோம் நிங்கள் வெற்றுக் கண்ணோடாவது அதனை படித்தீர்களா?

பக்கவாத்திய வாதம் 04

ஏனெனில் மௌலானா மௌதூதி அவர்கள் தனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதை தான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்.

இப்பந்தியை இவர்கள் வாசித்திருக்காமல் விட்டிருக்க முடியாது. இதை வாசித்த பிறகும் தமது கட்டுரைக்கு 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி' என்று தலைப்பிட இவர்களைத் தூண்டிய காரணி எதுவாக இருக்க முடியும்? சிந்திப்பவர்கள் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள்.

நமது பதில்

ஆம் கண்டிப்பாக வாசித்தோம் வாசிக்காமல் உங்களைப் போல் நுனிப்புல் மேயவில்லை.

மவ்தூதி அப்படி மாத்திரம் சொல்லியிருந்தால் பிரச்சினையில்லை. முரண்பாட்டின் மொத்த உருவம் போல் மாறி மாறி கருத்துச் சொன்னவர் இறுதியில் தெளிவாக தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார் அதனை கண்டும் காணாமல் விடுவதற்கு நாம் ஒன்றும் உங்களைப் போல் நுனிப்புல் மேயவில்லையே?

பக்கவாத்திய வாதம் 05

அது மட்டுமன்றி மௌலானா அவர்கள் தமது தப்ஸீரான தப்ஹீமுல் குர்ஆனில் தஜ்ஜாலின் வருகை உண்மையானது என்பதை ஏற்றுக் கொள்வதோடு அதை ஹதீஸ் ஆதாரங்களோடும் நிரூபிக்கின்றார்கள். சூறதுல் அஹ்சாபின் 40வது வசனமான 'مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا என்ற வசனத்திற்கான விளக்க உரையில் இறுதி நபித்துவத்தோடு சம்பந்தப்படுத்தி ஈஸா அலைஹிஸ்ஸலாம்> தஜ்ஜால் ஆகியோரின் வருகைப் பற்றி ஒரு நீண்ட விளக்கத்தை மௌலானா அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார் மௌலானா

நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும்> அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும்> அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும்> அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும்> அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்' (தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு பக்கம் : 78)

இந்த ஆதாரத்திற்குப் பின்னும் இவர்கள் 'மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார்' என்று சொல்வார்களாயின் இவர்கள் பத்திரிகை தர்மங்களின் அடிப்படையில் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்கள். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் தமது விதண்டாவாதங்களுக்காக அல்லாஹ்விடத்தில் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நமது பதில்

மவ்தூதி அவா்கள் தமது தப்ஹீமுல் குா்ஆனில் தஜ்ஜாலின் வருகை தொடர்பாக இப்படியெல்லாம் கூறியுள்ளார்கள் அப்படியிருக்க இப்படி இவர்கள் தலைப்பிட்டது என்ன பத்திரிக்கை தர்மம் இவர்கள் மறுமையில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று இலேசாக தட்டிக் கொடுத்து செல்கிறீர்கள் இதுதான் நீங்கள் பதில் எழுதும் லட்சனமா?

முதலில் தப்ஹீமுல் குா்ஆனில் மவ்தூதி தஜ்ஜாலின் வருகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தை மவ்தூதி சொல்கிறாரே அந்த நீண்ட விளக்கத்தை முழுமையாக கூடுதல் குறைவின்றி தைரியம் இருந்தால் வெளியிடுங்கள்.
தப்ஹீமுல் குா்ஆனில் இப்படித்தான் சொல்கிறார் என்கிறீர்களே அப்படியானால் தர்ஜுமானுல் குா்ஆன் என்ற தனது பத்திரிக்கையில் என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்களிடையே இவ்வாரான செய்திகள் பிரபலமானதற்கான பொருப்பு இஸ்லாம் மீது இல்லை. அதில் ஏதாவது ஒன்று தவறு என்று நிரூபனமானாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை. (தர்ஜுமானுல் குா்ஆன் செப்டம்பர் – அக்டோபர் 1945)

இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இந்த வாசகம் நமது முதல் கட்டுரையிலேயே இந்தத் தகவலையும் கொடுத்திருந்தோம் இதையும் நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதற்கான காரணம் கண்ணாடி போடவில்லை என்பதாலா?

தஜ்ஜால் பற்றிய செய்திகளுக்கு மார்க்கத்தில் எந்த அந்தஸ்தும் இல்லை அவனைத் தேட வேண்டிய அவசியமுமில்லை. தஜ்ஜால் பற்றிய செய்திகளுக்கு இஸ்லாம் பொருப்புமில்லை என்றெல்லாம் சொல்கிறாறே இது எனது கற்பனையா? அபாண்டமா? அவதூரா?

இதே செய்தியை மார்ச் மாத சமரசம் பத்திரிக்கையிலும் 33ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பாருங்கள்.

தப்ஹீமுல் குா்ஆனில் ஒரு விளக்கம் (?) தர்ஜுமானுல் குா்ஆனில் வேறொரு விளக்கம் (?) இன்னும் எதில் எதில் எந்தந்த விளக்கமோ?

சமரசம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு விளக்கம் கேட்டால் தப்ஹீமுல் குா்ஆனில் இப்படி சொல்லியிருக்கிறார் என்கிறீர்களே அப்படியானல் தர்ஜுமானுல் குா்ஆனில் சொன்னதாக சமரசம் பத்திரிக்கையில் வந்த செய்திக்கு என்ன பதில் அதை சொல்லுங்கள் ஏன் கண்டும் காணாததைப் போல் நுனிப்புல் மேய்கிறீர்கள்?

நாம் எழுதிய கட்டுரைக்கான முழு பதிலைத் தாருங்கள்.

பக்கவாத்திய வாதம் 06

இனி இவர்களின் இரண்டாவது குற்றச்சாட்டு பற்றி நோக்குவோம். 'தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களை நபிகளாரின் எண்ணமே அன்றி வஹியல்ல என்று கூறி மவ்தூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்'. என்பதுதான் அது.

உண்மையில் தமீம் அத்தாரி என்ற ஸஹாபி தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்ட கடற் பிரயாணமொன்றில் தஜ்ஜாலை சந்தித்த நிகழ்வு பற்றி வந்திருக்கும் ஹதீஸ் குறித்து மௌலானா மௌதூதி அவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கும் இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் 'கிதாபுல் பிதன்' அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ் பற்றி மௌலானா குறிப்பிடும் போது

தமீம் தாரி அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா? நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா? என்று வினவுகின்றார்.

இந்த ஹதீஸைப் பற்றிய ஆய்வுக்கு முன்னர் மௌலானா மௌதூதி அவர்கள் நபியவர்கள் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்கவில்லை என்பதையும்> அவற்றை வஹியின் அறிவின்றி தமது அனுமானத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டார்கள் என்றோ மௌலானா கருதவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாற்றமாக தமீம் அத்தாரி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சம்பந்தமான ஹதீஸை மட்டுமே மௌலானா நபிகளாரின் அனுமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து மேற் கூறிய ஹதீஸை நபிகளாரின் அனுமானம் என்று விளங்கிக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதை அந்த ஹதீஸை ஆழ்ந்து நோக்குகின்ற போது புரிந்து கொள்ளலாம். 

நமது பதில்.

மவ்தூதியின் வார்த்தைகளுக்கு முட்டுக் கொடுக்க வந்தீர்கள் அசத்தியத்தை சத்தியமாக காட்ட முனைந்தால் கடைசியில் கைசேதப்படுவீர்கள் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய சான்றாகும்.

அதாவது தமீமுத் தாரி (ரலி) அவா்களின் கடற் பயணம் தொடர்பான செய்தியில் மாத்திரம் தான் மவ்தூதி சந்தேகம் தெரிவிப்பதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் மவ்தூதி உண்மையில் குறிப்பிட்ட செய்தியில் மாத்திரம் சந்தேகப்படவில்லை அனைத்து செய்திகளிலும் சந்தேகப்படுகிறார் என்பதை அவருடைய வார்த்தையே நமக்கு எடுத்துச் சொல்கிறது பாருங்கள்.

இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும்.அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள்.சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள்,வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள்.ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யூதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள்.

இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிருஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும் (பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்)மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும் அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும்அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக் கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போதுநபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அதுபற்றி சந்தேகத்தை தெரிவித்துவிட்டார்கள். ஆனால் நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன். என்றார்கள்.

நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.(தர்ஜுமானுல் குர்ஆன் பெப்ரவரி - 1946)

நபியவர்கள் சில போது இப்படியும் சில நேரம் இப்படியும் மற்றும் சில சந்தர்ப்பத்தில் அப்படியும் கூறுவார்கள் மொத்தத்தில் தஜ்ஜால் விஷயமாக நபியவர்களுக்கே சந்தேகம் இருந்தது என்று அனைத்து செய்திகள் தொடர்பாகவும் தான் சொல்கிறாறே தவிர தமீமுத் தாரி அவா்களின் கடல் பிரயாணத்துடன் தொடர்பு பட்ட செய்திக்கு மாத்திரம் அவர் சொல்லவில்லை என்பதை புரியுங்கள்.

(தஜ்ஜால்) தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும். அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள். என்ற வாசகம் எதனை சொல்கிறது பல்வேறுபட்ட செய்திகள் என்பது தமீமுத் தாரி தொடர்பான ஒரு செய்தியைத் தான் குறிக்குமா?

இதுதான் உங்கள் ஆழ்ந்த ஆய்வின் (?) ஞானமோ?

மவ்தூதி சொல்லும் இன்னுமோர் விஷயத்தையும் கவணியுங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா?

தஜ்ஜால் தம்முடைய காலத்தில் அல்லது தமக்குப் பின் வெகு விரைவில் தோன்றுவான் என்ற என்னம் நபியவர்களுக்கு இருந்தது  ஆனால் பதின் மூன்றரை நூற்றாண்டு காலமாக தஜ்ஜால் வராததினால் நபியவர்கள் நினைத்தது தவறு என்பது நிரூபனமாவதாக மவ்தூதி சொல்கிறார்.

தமீமுத் தாரியின் ஹதீஸை மாத்திரம் மறுப்பவராக மவ்தூதி இருந்தால் இப்படி கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

ஏன் என்றால் தமிமுத் தாரி அவா்களின் செய்தியை மாத்திரம் வைத்து நபியவர்கள் தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை செய்யவில்லை.

இறைவனின் வஹியின் மூலம் தஜ்ஜாலின் வருகை பற்றி இன்னும் பல செய்திகளை ஹதீஸாக சொல்லியுள்ளார்கள் என்பது தாங்களும் ஒத்துக் கொண்ட, உங்கள் கருத்துப்படி மவ்தூதியும் ஒத்துக் கொண்ட விஷயம்.

அப்படியிருக்க பதின் மூன்றரை நூற்றாண்டால் என்ன? பத்தாயிரம் நூற்றாண்டால் என்ன? தஜ்ஜால் வருவான் என்று நபியவர்கள் சொன்னார்கள் என்று ஸஹீஹான செய்திகள் வரும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே எத்தனை ஆண்டானால் என்ன ?

தமீமுத் தாரியின் ஹதீஸ் இல்லாமல் மற்ற ஹதீஸ்களுக்கும் இதுதானே பதில். மற்ற செய்திகளிலும் நபியவர்கள் சொன்ன தஜ்ஜால் இன்னும் வரவில்லை அதனால் இனிமேலும் வரமாட்டான் என்பது அர்த்தமா?

நபியின் மீது அவதூராக கருத்து சொல்லியிருக்கிறார். நபியின் வார்த்தைகளையே சந்தேகத்திற்குற்படுத்துகிறார் அப்படிப்பட்ட மவ்தூதியைக் காப்பாற்ற வியாக்கியானம் வேறு சொல்கிறீர்கள்? இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

பக்கவாத்திய வாதம் 07

இந்த ஹதீஸை அறிவிக்கும் சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'தொழுகை முடிந்து நபிகளார் சிரித்த வண்ணம் மிம்பரில் அமர்ந்து கொண்டார்கள். பிறகு அனைவரையும் அவரவர் இடத்தில் அமருமாறும் பணித்தார்கள். பின்னர் 'உங்களை ஏன் அழைத்தேன் என்று தெரியுமா?' என்று ஸஹாபாக்களைப் பார்த்து வினவ> அதற்கு அவர்கள் 'அல்லாஹூம் ரஸூலுமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு உபதேசிக்கவோ> எச்சரிக்கை செய்யவோ நான் அழைக்கவில்லை. மாற்றமாக கிறிஸ்த்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற தமீம் அத்தாரி சொன்ன ஒரு சம்பவத்தைக் கூறவே உங்களை அழைத்தேன். உங்களுக்கு ஏலவே நான் தஜ்ஜால் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? தமீம் அத்தாரி குறிப்பிட்ட அச்சம்பவம் நான் சொன்னவைகளோடு உடன்படுகின்றது' என்று கூறிவிட்டே தமீம் அத்தாரி அவர்கள் குறிப்பிட்ட சம்பவத்தை ஸஹாபாக்களுக்கு நபிகளார் அறிவித்தார்கள்.

இங்கு நபிகளார் ஆரம்பத்திலேயே, தான் 'உபதேசிக்கவோ> எச்சரிக்கவோ உங்களை அழைக்கவில்லை' என்று குறிப்பிட்டது நபிகளார் வஹியின் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தியொன்றை கூறவில்லை என்ற விளக்கத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு உடன்பாடாக அமைகின்றது.

இதன் அடிப்படையிலேயே மௌலானா அவர்கள் தஜ்ஜால் ஏற்கனவே தோன்றிவிட்டான் என்ற செய்தி நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். இம்முடிவுக்கு வந்ததன் காரணமாக மௌலானா நபிகளாரின் ஹதீஸ்களை மறுக்கின்றார்> அவர் மீதே சந்தேகப்படுகின்றார்> அவதூரு பரப்புகின்றார் என்று கூறுவது சரியாகது. தௌஹீத்வாதிகள் சொன்னதுக்காக சத்தியமும் ஆகிவிடாது.
 
நமது பதில்

மவ்தூதி தமீமுத் தாரி அவா்கள் தொடர்பான ஹதீஸை மாத்திரம் தான் மறுப்பதாகவும் மற்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டதாகவும் கதையளக்கிறீர்கள். உங்கள் வாதப்படி வைத்தால் கூட தமீமுத் தாரி அவா்கள் தொடர்பான செய்தியைக் கூட மவ்தூதி எப்படி மறுக்க முடியும்?

உங்களுக்கு உபதேசிக்கவோ> எச்சரிக்கை செய்யவோ நான் அழைக்கவில்லை. மாற்றமாக கிறிஸ்த்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற தமீம் அத்தாரி சொன்ன ஒரு சம்பவத்தைக் கூறவே உங்களை அழைத்தேன். உங்களுக்கு ஏலவே நான் தஜ்ஜால் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? தமீம் அத்தாரி குறிப்பிட்ட அச்சம்பவம் நான் சொன்னவைகளோடு உடன்படுகின்றது' என்று கூறிவிட்டே தமீம் அத்தாரி அவர்கள் குறிப்பிட்ட சம்பவத்தை ஸஹாபாக்களுக்கு நபிகளார் அறிவித்தார்கள்.

என்று கூறிய நீங்கள் அடுத் கட்டமா இப்படி சொல்கிறீர்கள்…

இங்கு நபிகளார் ஆரம்பத்திலேயே, தான் 'உபதேசிக்கவோ> எச்சரிக்கவோ உங்களை அழைக்கவில்லை' என்று குறிப்பிட்டது நபிகளார் வஹியின் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தியொன்றை கூறவில்லை என்ற விளக்கத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு உடன்பாடாக அமைகின்றது.

இதுதான் நீங்கள் ஹதீஸ்களை புரியும் லட்சனமா? இப்படித்தான் உங்கள் தூய்மையான (?) அமைப்பு உங்களுக்கு கற்றுக் தந்ததோ?

நான் உங்களை உபதேசிக்கவோ எச்சரிக்கை செய்வதற்கோ இங்கு அழைக்கவில்லை என்ற வாசகம் நபியவர்கள் வஹியின் அடிப்படையில் இதனை சொல்லவில்லை தமீமுத் தாரி சொன்னதைத் தான் சொல்கிறார்கள் என்பதை போல் தோன்றினாலும், தமீமுத் தாரியின் செய்தியைச் சொல்ல வந்த நபியவர்கள்  தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். என்று சொல்லிவிட்டு தமீமுத் தாரி சொன்ன செய்தியை மக்கள் மத்தியில் நபியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

ஏற்கனவே பல முறை வஹியின் அடிப்படையில் தஜ்ஜால் பற்றி நபியவர்கள் ஸஹாபாக்களிடம் சொல்லியிருந்தார்கள். நபி (ஸல்) அவா்கள் எதனை மக்கள் மத்தியில் சொன்னார்களோ அப்படிப்பட்ட செய்தியை ஒத்த செய்தியைத் தான் தமீமுத் தாரி அவா்களும் நபியிடம் கூறினார்கள்.

ஆக தமீமுத் தாரி சொன்ன விஷயம் ஏற்கனவே வஹியின் அடிப்படையில் நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மக்கள் மத்தியில் சொல்லப்பட்ட விஷயம் என்றாலும் தமீமுத் தாரி கிருத்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர் அவரும் இதனை உறுதிப் படுத்துகிறார் என்ற மேலதிக தகவலைத் தான் நபியவர்கள் இங்கு தெரிவிக்கிறார்கள்.

அது மட்டுமின்றி தமீமுத் தாரி அவா்கள் அறிவித்த செய்தியில் தான் கண்ட குறிப்பிட்ட மனிதன் சில கேள்விகளை அவா்களிடம் கேட்டுவிட்டு, இன்னும் சில செய்திகளையும் சொல்கிறான் அந்த செய்திகள் தமீமுத் தாரியின் செய்தியல்லாத மற்ற ஹதீஸ்களிலும் வந்திருக்கத்தான் செய்கின்றன.

அப்படியிருக்க தமீமுத் தாரியின் செய்தியை பொய்யாக்குவதில் மவ்தூதிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

அதற்கு வக்காளத்து வாங்குவதற்கு ஏன் இவ்வளவு போராட்டம்?

தஜ்ஜாலின் முழு வருகையையும் பொய்யாக்கி கருத்துச் சொல்லியிருக்கும் மவ்தூதிக்கு வக்காலத்து வாங்கி தஜ்ஜால் ஏற்கனவே தோன்றிவிட்டானா இல்லையா என்றுதான் மவ்தூதி பேசுகிறார் என்று வியாக்கியானம் தர வருகிறீர்கள்.

பக்கவாத்திய வாதம் 08

நபிகளார் மீதும்> அவர்களின் நபித்துவத்தின் மீதும் மௌலானா கடுகளவு கூட சந்தேகம் கொண்டிருக்கவில்லை என்பதை இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையே சான்றுபகர்கின்றது. அக்கட்டுரையில் மௌலானா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

(நபி) அவர்களின் கூற்று (தஜ்ஜால் தோன்றி விட்டான் என்ற அனுமானம்) உண்மையானது என்று உறுதிப்படவில்லையானாலும் அவர்களின் நபித்துவத்தில் எவ்விதமான குறையையும் ஏற்படுத்துவதில்லை. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையிலும் குறை ஏற்படுவதில்லை.

இதற்கும் மேலாக இறுதி நபித்துவத்திற்கு எதிரான காதியானிய சிந்தனைக்கு எதிராக மௌலானா போராடி தூக்கு மேடை வரைச் சென்று வந்தவர். அத்தயை ஒருவருக்கு 'நபிகளாரின் மீது அவதூரு பரப்புகின்றார்' என்று குற்றம்சாட்டுவது எத்தகைய அசத்தியமாக இருக்க முடியும்.

நமது பதில்

நபியின் மீது மவ்தூதி சந்தேகம் கொண்டிருக்கவில்லை என்பதற்கு நாம் ஆதாரம் காட்டிய சமரசத்தில் வெளிவந்த மவ்தூதியின் கட்டுரையே சான்று பகர்கிறது என்று மவ்தூதி சொல்வதாக தாங்கள்  சொன்ன செய்தியில் மவ்தூதி அப்படிக் கூறவேயில்லை மீண்டும் ஒரு முறை சமரசம் பத்திரிக்கையை எந்தக் கண்ணாடியைப் போட்டாவது படித்துப் பாருங்கள் மவ்தூதி சொன்ன செய்தியில் மேலே நீங்கள் குறிப்பிடும் செய்தியில் உள்ளதைப் போன்ற அடைப்புக் குறி போடப்பட்ட செய்திகளெல்லாம் இல்லை.

இதுதான் மவ்தூதி சொல்லும் தகவல்.

நபியவர்களின் கூற்று உண்மையானது என உறுதிப்படவில்லையானாலும், அவர்களின் நபித்துவத்தில் எவ்வித குறையும் ஏற்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையிலும் குறை ஏற்படவில்லை. (சமரசம் 1-15 ஏப்ரல் 61ம் பக்கம்)

தஜ்ஜாலின் வருகையையே சந்தேகப்படும் மவ்தூதியின் கருத்துக்கள் மிகத் தெளிவாக இருந்தும் தஜ்ஜால் தோன்றிவிட்டானா? என்பதில் தான் மவ்தூதி சந்தேகம் தெரிவிக்கிறார் என்று ஏன் திசை திருப்ப முயல்கிறீர்கள்?

ஒரு வாதத்திற்காக தஜ்ஜால் தோன்றிவிட்டானா என்பதில் தான் சந்தேகம் இருக்குமானால் எங்கே தஜ்ஜால் என்று  தலைப்பு போட வேண்டிய தேவை என்ன? தஜ்ஜால் ஏற்கனவே தோன்றிவிட்டானா? என்று தலைப்பிட்டிருக்களாமே? எங்கே தஜ்ஜால் என்ற தலைப்பே செய்தி என்னவென்பதை சுட்டிக்காட்ட போதுமான சான்றாக இல்லையா?

மவ்தூதியே போடாத அடைப்புக் குறியை நீங்கள் ஏன் போடுகிறீர்கள்?

இதற்குக் காரணம் மவ்தூதியின் மேல் வைத்த ஆசையா? மோகமா? பக்தியா?

இவ்வளவு தெளிவாக தஜ்ஜால் விஷயமாக நபியவர்கள் சொன்னவைகளில் சந்தேகங்களை தெரிவித்திருக்கும் மவ்தூதி நபியவர்களின் மீதும் நபித்துவத்தின் மீதும் கடுகளவும் சந்தேகம் கொண்டிருக்கவில்லை என்று சொல்கிறீர்கள். இதை விட வேறு என்ன சந்தேகம் வேண்டியிருக்கிறது?

உங்கள் பார்வையில் இது சந்தேகமே இல்லையேன்னால் எதைத் தான் சந்தேகம் என்று சொல்வீர்கள்?

எந்தக் கட்டுரை சான்று பகர்வதாகச் சொன்னீர்களோ அந்தக் கட்டுரைதான் மவ்தூதி யார் என்பதையும் நபியின் மீது அவா் எப்படியெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

மவ்தூதி தூக்கு மேடை வரை போய் வந்தவர் என்பதினால் அவர் சொல்பவைகள் அனைத்தும் சரியாகிவிடுமா என்ன? தூக்கு மேடை வரை போனவர் என்பதினால் நபியவர்கள் மீதே அபாண்டம் சுமத்த அனுதிக்க முடியுமா?

யாராக இருந்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அசத்தியத்திற்க எதிராக குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பக்கவாத்திய வாதம் 09

நுனிப்புல் மேய்ந்து, அழுக்கைத் தேடியலையும் சில ஸலபீக்களின் மட்டமான ஆய்வுகளுக்கு இந்தக் கட்டுரை முற்றிப் புள்ளி வைத்துவிடாது என்று தெரியும். என்றாலும் - சத்தியம் மேலோங்கும் போது அசத்தியம் சுவடில்லாமல் அழிந்து போகும் என்பது திண்ணம்.

நமது பதில்

இப்போது தெரிந்திருக்குமே நுனிப்புல் மேய்வது யார்? பணிப்புல் நக்குவது யார் ? என்பதெல்லாம். நீங்கள் சொல்வது சத்தியம் என்றால் நமது பதிலுக்கு பதில் வரிக்கு வரி தாருங்கள் இன்னும் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிப் போடத் தயாராக இருக்கிறோம்.

இறுதியாக……………………………….

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)


2 comments:

அபூ ஷபீக் said...

அஸ்ஸாமு அலைக்கும்

அன்பிப் சகோதரரே! நான் தவ் ஹீத் ஜமாத் ஆதரவாளன் இல்லையென்ற்றாலும், நல்ல விசயங்கள் யார் சொன்னாலும் செய்தாலும் ஆதரிக்கவேண்டும் என்ற்ற என்னம் உடையவன். குரான் சுன்னா வழியில் யார் கருத்து சொன்னாலும் நிச்சயம் அதற்க்கு செவி சாய்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடைமையாகும், அந்த அடிப்படையில் இங்கு பதியப்பட்ட கட்டுரையை படித்தேன், சமரசம் இதழில் பதியப்பட்ட கருத்தையும் படித்தேன்.நீங்கள் கூறிய கருத்துக்கு நான் உடன் படுகிரேன்.

மாஸலாமா!

RASMIN M.I.Sc said...

வஅலைக்குமுஸ்ஸலாம். உங்கள் கருத்துக்கு ஜஸாகல்லாஹு கைரா ! தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.