தக்லீ்த் ஓர் ஆய்வு. (தொடர் 07)
ஸஹாபாக்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாகுமா? 02
எந்தக் காரணம் கொண்டும் நபித் தோழர்களை மார்க்க ஆதாரங்களாக கொள்ளக் கூடாது என்றும் நபித் தோழர்களும் தங்களை அறியாமல் தவறுகள் செய்திருக்கிறார்கள் குா்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக பேசியுள்ளார்க்ள என்பதையும் அதைப் பற்றிய செய்திகளையும் நாம் சென்ற தொடரில் பார்த்தோம்.
அது தொடர்பாக இன்னும் சில மேலதிக தகவல்களையும் நாம் இந்தத் தொடரில் பார்ப்போம்.
ளுஹா தொழுகையை மறுக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உபரியான) சில கிரியை (அமல்)களைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். மக்களும் அவற்றைச் செய்ய அவர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். நான் ளுஹாத் தொழுகை தொழுதுவருகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹாத் தொழுததில்லை (பார்க்க புகாரி 1128, 1177)
தமத்துஃ ஹஜ்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.
நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, 'லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்' என்று கூறிவிட்டு, 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம் , நூல் : புகாரி 1563
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், 'அது அனுமதிக்கப்பட்டதே!' என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், 'உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), 'என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்' என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : ஸாம் , நூல் : திர்மிதீ (753)
தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?
இஹ்ராமின் போது நபி திருமணம் முடித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியது.
மைமூனா (ரலி) தம்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.
(பார்க்க புகாரி 1837)
113 மற்றும் 114ம் அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்.
குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.
இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?
நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, 'நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்' என்று கூறிவிட்டு, 'முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.
அப்போது நான், 'என் இறைவா, என் தோழர்கள்' என்று சொல்வேன். அதற்கு, 'இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், 'நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்' என்று பதிலளிப்பேன். அதற்கு, 'இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்' என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4740, 6524
குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.
'மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம் 318
ஆய்வு தொடரும்...................
கடந்த தொடர்களைப் பார்க்க :
தொடர் ஆறு இங்கு க்லிக் செய்யுங்கள்.
No comments:
Post a Comment