June 8, 2011

தஜ்ஜால் என்றால் கிருத்தவர்களா? புனையப்பட்ட புதுக் கதை.
இணையக் குழுமங்கள் மூலம் பரப்பப்படும் ஆக்கத்திற்கான மறுப்பு.
RASMIN M.I.Sc
தஜ்ஜால் என்றொருவன் வருவான் அவன் மூலம் பெரும் சேதங்க இவ்வுலகில் ஏற்படும் என்றெல்லாம் பல செய்திகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

தஜ்ஜாலின் வருகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளையும் செய்துள்ளார்கள். ஆனால் அண்மைக் காலமாக சிலர் தங்கள் சுய சிந்தனைக்கு சில செய்திகள் எட்டவில்லை என்பதற்காக தஜ்ஜாலின் வருகையை மறுத்த காட்சிகளைப் பார்த்தோம்.

குறிப்பாக ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மவ்தூதியே தஜ்ஜாலின் வருகையை மறுத்தது தொடர்பான ஆக்கம் ஒன்றையும் நாம் வெளியிட்டு இருந்தோம்.

பார்க்க :தற்போது தஜ்ஜால் என்றால் ஒரு மனிதன் கிடையாது தஜ்ஜால் என்ற வாசகம் ஒட்டு மொத்த கிருத்தவர்களையும் குறிப்பிடும் வாசகம் என்ற கருத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இணைய குழுமங்கள் வாயிலாக அது பரப்பப்படுகிறது.

குறிப்பிட்ட ஆக்கம் முழுக்க முழுக்க பொய்யையும், அபாண்டத்தையும் சுமந்ததாக இருப்பதினால் அந்த ஆக்கத்திற்கு முழுமையான ஒரு பதிலை நாம் இங்கு வெளியிடுகிறோம்.

குறிப்பிட்ட அந்த ஆக்கம் சிகப்பு நிறத்தில் வெளியிடப்படுகிறது.

மேலே உள்ள ஆக்கத்தின் பொய்யையும் அபாண்டத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இப்போது நோக்குவோம்.
குறிப்பிட்ட ஆக்கத்தில் ஐந்து விதமாக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை…..
1.தஜ்ஜால் என்பது ஒரு மனிதன் கிடையாது ஒரு பெரும் கூட்டம்.
2.நபியவர்கள் தஜ்ஜாலை பார்க்கும் போது சூரா கஹ்ப் ஓதச் சொன்ன செய்தி பற்றிய மழுப்பல்..
3.தஜ்ஜாலின் கண் குருடானது என்பது கருத்துக் குருடைக் குறிக்குமே தவிற உண்மையான குருடு அல்ல.
4.தஜ்ஜால் மழை பொழியச் சொன்னால் மழை பொழியும் என்பது செயற்கை மழையைக் குறிக்கும்.
5.தஜ்ஜால் முழு உலகையும் ஆட்சி செய்வான் என்பது பிரிடிஷ் காரர்களின் ஆட்சியைக் குறிக்கும்.
இவைகள் தான் கட்டுரையாளர் முன்வைக்கும் வாதங்கள் இந்த வாதங்கள் ஒவ்வொன்றாக நாம் இங்கு அலசுவோம்.
குருட்டு வாதம் 01
தஜ்ஜால் என்பது ஒரு மனிதன் கிடையாது ஒரு பெரும் கூட்டம்.
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது.

குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை என்பதை நிரூபித்து வருகின்றனர்

தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.

தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.  

நமது பதில்
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லீம்கள் மத்தியில் பலவிதமான தவறாக எண்ணங்களும் மூட நம்பிக்கைகளும் இருப்பது உண்மைதான் ஆனால் தஜ்ஜாலைப் பற்றி குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியான புரிதல் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கட்டுரையாளர் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
தஜ்ஜாலைப் பற்றிய செய்திகளுக்கு நேரடி அர்த்தம் கொடுத்தவர்கள் மூலை குழம்பியவர்கள் என்று அதிகப்பிரசங்கித் தனமாக பேச முற்பட்டவர் மறை கழன்று தாறு மாறாக உளரிக் கொட்டியுள்ளதை கீழே நாம் விளக்கும் போது வாசகர்கள் தெளிவாக அறிய முடியும்.
தஜ்ஜால் என்ற வார்த்தைக்கு அகராதி விளக்கம் சொல்ல முட்பட்டவர் தான் ஒரு அறை குறை என்பதை தெளிவாக நிரூபணம் செய்துவிட்டார்.
ஒரு ஹதீஸுக்கு விளக்கம் சொல்வதாக இருந்தால் அது தொடர்பாக நபியவர்கள் சொன்ன அனைத்து செய்திகளையும் முதலில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் அதன் பின்னர் அந்த செய்திகளில் குறிப்பிட்ட வாசகத்திற்கு நபியவர்கள் என்ன விளக்கம் சொல்லியுள்ளார்கள் என்பதைக் கவணிக்க வேண்டும் அதன் பின்னர் தான் அகராதியின் துணையை நாட வேண்டும் என்பது அணைவரும் அறிந்த சாதாரண விஷயம் ஆனால் இந்த விஷயம் கூட இந்த அறிவு ஜீவிக்கு(?) தெரியவில்லை அதனால் தான் அகராதியையே ஆதம்பத்தில் கையில் எடுத்தார் போலும்.
சரி அதன் படியாவது தன் கருத்தை நிரூபணம் செய்தாரா என்றால் அதுவும் இல்லை.
தஜ்ஜால் என்றால் பெரும் பொய்யன் – தஜ்ஜால் என்றால் பிரயாணம் செய்யும் கூட்டம் – தஜ்ஜால் என்றால் அதிகப்படியான எண்ணிக்கையினால் புவியை மூடக்கூடிய அளவில் காணப்படும் பெரும் கூட்டம் என்றெல்லாம் லிசானுல் அரப் சொல்வதினால் அது கிருத்தவர்கள் தான் என்பது அவரின் வாதம்.
கட்டுரையாளரின் வாதப்படியே பார்த்தால் தஜ்ஜால் என்றால் பிரயாணம் செய்யும் கூட்டம் என்றொரு பொருளையும் லிசானுல் அரப் சொல்கிறது. அப்படியானால் அனைத்து கிருத்வர்களும் பிரயாணிகளாகத் தான் இருக்க வேண்டும். எங்கும் நிலையாகத் தங்கக் கூடாது.
ஆனால் இன்று பல நாடுகளில் அவர்கள் நிலையாகத் தங்கியிருக்கிறார்களே இதற்கு என்ற மழுப்பல், சொதப்பல் சொல்லப் போகிறார் பார்போம்.
அதே போல் இந்த புவியையை மூடும் அளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கை கொண்ட கூட்டம் என்று லிசானுல் அரப் சொல்கிறது. இன்று அதிகமாக இருப்பவர்கள் கிருத்தவர்கள் என்பதினால் தஜ்ஜால் என்றால் கிருத்தவர்கள் தான் என்றும் வாதிக்கிறார்.
இன்றைய உலகில் கிருத்தவர்களும் முஸ்லீம்களும் கிட்டத்தட்ட சரிக்கு சமமான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள் உங்கள் வாதப்படி பார்த்தால் தஜ்ஜால் என்றால் அதிகமாக கூட்டம் என்ற பொருள் கொடுத்தால் முஸ்லீம்களும் தஜ்ஜால்கள் தான் என்ற விளக்கமும் சொல்ல முடியுமே அப்படியும் சொல்வீர்களோ?
எழுதுகிறோம் என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொட்டாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்.
குருட்டு வாதம் 02
நபியவர்கள் தஜ்ஜாலை பார்க்கும் போது சூரா கஹ்ப் ஓதச் சொன்ன செய்தி பற்றிய மழுப்பல்..
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.

அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும் கிடையாது.

அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.

அவர்கள் பொய்யே கூறுகின்றனர்

இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்  பொய்யர்கள் என்று கூறுகிறது  தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை ஓதுமாறு கூறியதிலிருந்து அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம். நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும், இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு செல்வார்கள் என்று தெரிகிறது.  

நமது பதில்
தஜ்ஜாலை யாராவது அடைந்தால் சூரா கஹ்பின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ள செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),  நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸை வைத்து கட்டுரையாளர் வைக்க வந்த வாதத்தை தெளிவாக எடுத்துரைக்கவில்லை. சம்பந்தமில்லாமல் உளரிக் கொட்டியுள்ளார் என்பதே தெளிவு.

கிருத்தவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று சொல்கிறார்கள் என்பதைப் பற்றி பேசியவர் சூரா கஹப் ஓத வேண்டுமா? வேண்டாமா என்பதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

கிருத்தவர்கள் நபியின் காலத்தில் இருந்தாலும் தற்காலத்தில் தான் பொய்ப்பிரச்சாரத்தை முழு உலகுக்கும் கொண்டு செல்கிறார்கள் என்று உளறுகிறார்.

இறைவனுக்கு மகன் உண்டு என்று நபியின் காலத்திலேயே அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள் அதனால் தான் அல்லாஹ்வே அதனைக் கண்டித்து திருமறையில் வசனத்தையே இறக்கினான்.

அப்போதே கிருத்தவர்கள் தங்கள் பணியை செய்ய ஆரம்பித்திருக்கும் போது பதில் இல்லை என்பதால் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக கட்டுரையாளர் இந்த பதிலை சொல்கிறார்.

தஜ்ஜாலை அடைந்தால் சூரா கஹ்பை ஓதுங்கள் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் அப்படியானால் கிருத்தவர்கள் தான் தஜ்ஜால் என்றால் இப்பொது எந்த கிருத்தவனைப் பார்த்தாலும் சூரா கஹ்பின் ஆரம்ப வசனங்களை ஓத வேண்டுமா?

இதைப் பற்றி ஏன் தாங்கள் வாய் திறக்கவில்லை?

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம் என்பார்கள் அது போல் உள்ளது உங்கள் ஆக்கம்.

குருட்டு வாதம் 03

தஜ்ஜாலின் கண் குருடானது என்பது கருத்துக் குருடைக் குறிக்குமே தவிற உண்மையான குருடு அல்ல.
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள். இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது.

எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இதன் பொருள் ஆன்மீக ரீதியாக எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக குருடராக இருப்பார்.   இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..

ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது

அவன் யாரையும் பெறவுமில்லை. எவராலும் பெறப்படவுமில்லை.

இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.  அது அறிவியல் ரீதியான கண்   நபி (ஸல்) கூறுகிறார்கள்.

தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும் எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும். இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர- காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.  

நமது பதில்

அடுத்த வாதமாக தஜ்ஜாலின் கண் குருடாக இருக்கும் என்று நபியவர்கள் குறிப்பிட்ட செய்திக்கு வியாக்கியானம் கொடுக்க முட்படுகிறார் கட்டுரையாளர்.

தஜ்ஜாலின் கண் குருடு என்றால் கிருத்தவர்கள் கருத்துக் குருடர்கள் என்பது அவருடைய வாதம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததினால் ஆண்மீக ரீதியாக அவர்கள் குருடர்களாக இருக்கிறார்கள் என்பதே அவரின் வாதம்.

ஆனால் குருடன் என்பது உடல் ஊனம் தான் என்பதை நபியவர்களின் பொன் மொழி நமக்கு தெளிவு படுத்துகிறது.

நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) 

நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057

தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும் என்று நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். வலக்கண் என்று தெளிவாக வந்துள்ளதால் இது கண்டிப்பாக உடல் ஊனத்தைத் தான் குறிக்குமே தவிர கருத்துக் குருடனை குறிப்பிடாது என்பதை அறிவுள்ள எவறும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள்.

இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் கிருத்தவர்கள் வலக்கண்களுக்கு என்ன வியாக்கியானம் வைத்திருக்கிறீர்கள்?

அடுத்து தஜ்ஜாலின் நெற்றியில் காபிர் என்று எழுதியிருக்கும் என்ற செய்தியை சொன்ன நீங்கள் ஏன் அதைப் பற்றிய உங்கள் விளக்கத்தை சொல்லவில்லை.

சட்டியில் இருந்தால் கரண்டியில் வரும் என்று சொல்வார்கள் உங்கள் சட்டியில் சரக்கு இருந்தால் தானே பதில் வரும்?

தஜ்ஜால் என்பவன் கிருத்தவன் என்ற உங்கள் வாதப்படி வைத்துக் கொண்டால் கீழுள்ள நபி மொழிகளுக்கு உங்கள் பதில் என்ன?

தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர் என்று எழுதப் பட்டிருக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 7131, 7404

இரு கண்களுக்கும் இடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இப்போது இதில் எது ஆண்மீகக் கண் எது அறிவியல் கண் என்பதைத் தெளிவு படுத்திவிட்டு எந்த இடத்தில் காபிர் என்று எழுதப்பட்டுள்ளது என்பதையும் கொஞ்சம் விளக்குங்கள் பார்க்களாம்.

எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),  நூல்: முஸ்லிம் 5223

எழுதத் தெரிந்த தெரியாத அனைத்து முஃமின்களும் அதனை படிக்க முடியும் என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள் இதற்கு உங்கள் பதில் என்ன?

எழுதத் தெரிந்தவர் தெரியாதவர் என்றால் யார்? அது கிருத்தவர்களின் நெற்றியில் எந்த இடத்தில் இருக்கிறது அதை எந்த முஃமின் படித்தார் என்பதையெல்லாம் தயவு செய்து காட்டிவிடுங்கள் அறிஞரே (?)

ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். 
நூல்: முஸ்லிம் 5223

மூக்கை ஒட்டிய பகுதியில் கடிணமான சதைத் துண்டு ஒன்று தென்படும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். அது ஆண்மீக சதைத் துண்டா? அல்லது அறிவியல் சதைத் துண்டா?

அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். 
நூல்: புகாரி 3441, 7026, 7128

தஜ்ஜால் சிவந்த நிறமுடையவன் என்று நபியவர்கள் கூறுகிறார்கள் அப்படியானால் இது ஆண்மீக சிகப்பா அல்லது அறிவியல் சிகப்பா என்பதை தெளிவுபடுத்துங்கள் பார்க்களாம்.

குருட்டு வாதம் 04

தஜ்ஜால் மழை பொழியச் சொன்னால் மழை பொழியும் என்பது செயற்கை மழையைக் குறிக்கும்.
தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும். இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.

நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா? என்று கேட்கறான்.

இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும். அதாவது ஷிர்க் ஆகும்.

தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.  சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.

நமது பதில்

தஜ்ஜால் மழை பொழியச் செய்வான் என்பது செயற்கை மழையைக் குறிக்கும் என்றும் அதனை தற்காலத்தில் கிருத்தவர்கள் தான் செயல்படுத்துகிறார்கள். என்பதினால் கிருத்தவர்கள் தான் நபியவர்கள் முன்னறிவிப்பு செய்த தஜ்ஜால் என்பது இந்த மாமேதையின் விளக்கம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்''  
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),  நூல்: முஸ்லிம் 5228

மழை பொழியுமாறு வானத்திற்கு கட்டளையிடுவான் அது தற்காலத்தில் கிருத்தவர்களால் செயல்படுத்தப்படும் செயற்கை மழைதான் என்று தாங்கள் உங்கள் வாதத்தை முன்வைக்கிறீர்கள்.

முதலில் ஒரு விஷயத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள் செயற்கை மழையை உண்டாக்கும் விஞ்ஞானிகள் கிருத்தவர்கள் என்ற உங்கள் கணிப்பின் அடிப்படையில் தான் இதனை சொல்கிறீர்கள்.

ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்ற நாத்தீகக் கொள்கை கொண்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை. உங்கள் வாதப்படி செயற்கை மழை பொழியச் செய்பவர்கள் தஜ்ஜால்கள் என்றால் கடவுலே இல்லை என்ற நாத்தீகர்கள் தான் உங்கள் வாதப்படி தஜ்ஜால்கள் அப்படியானால் உங்கள் வாதத்தின் அடிப்படை கூட இல்லை என்று தெளிவாகிவிடுகிறது.

தஜ்ஜால் மழையைப் பொழியச் செய்வான் என்பது உங்கள் பார்வையில் கிருத்தவர்கள் உருவாக்கும செயற்கை மழை தான் என்றால் அதனை அனைத்து கிருத்தவர்களையம் செய்து காட்டச் சொல்லுங்கள் பார்க்களாம் முடியாதல்லவா?

மேலும் தஜ்ஜால் மழையைப் பொழியச் செய்வான் என்ற நம்பினால் அது இணை வைத்தல் என்றும் வாதிடுகிறீர்கள்.

மழையைப் பொழியச் செய்பவன் அல்லாஹ் தான் அவனுக்குத் தான் அந்த ஆற்றல் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதே நேரத்தில் அல்லாஹ் சிலருக்கு சில நேரங்களில் சில ஆற்றல்களை வழங்குகிறான் அதனை நம்ப வேண்டியது முஃமின்களின் கட்டாயக் கடமை அப்படி நம்புவது ஒரு காலத்திலும் இணை வைத்தாலாக மாறாது.

உதாரணமாக

காற்றை உண்டாக்குவதும், புயலை அடிக்கச் செய்வதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளவைகள் ஆனால் சுலைமான் நபிக்கு இறைவன் அந்த அதிகாரத்தை கொடுத்தான் இதனை குா்ஆனே தெளிவாக நமக்கு சொல்கிறது (21-81, 34-12 , 38-36) உங்கள் வாதப்படி குா்ஆனின் இந்தத் தகவலை நம்புவது ஏற்றுக் கொள்வது இணை வைத்தல் அப்படித்தானே?

நபி மூஸா (அலை) அவர்கள் வெண் குஷ்ட நோய் உள்ளவனை குணப்படுத்தினார்கள் என்று நபி மொழி சொல்கிறது நோயைக் கொடுப்பவன் அல்லாஹ் நோயை இலாசாக்குபவன் அல்லாஹ் இந்த இடத்தில் மூஸா நபி நோயை இலாசாக்கினார்களே அவர்கள் அல்லாஹ்வா? இது இணைவைத்தலா?

அல்லாஹ் தனது அதிகாரத்தில் சிலதை சிலருக்குக் கொடுப்பான் அதனை நாம் நம்ப வேண்டும் அது எந்தச் சந்தர்ப்பத்திலும் இணை வைத்தல் என்ற பட்டியலுக்குள் வராது.

மூஸா நபிக்கு எப்படி இறைவன் சில ஆற்றலைக் கொடுத்தானோ, சுலைமான் நபிக்கு எப்படி காற்றை, ஜின்களை, ஷைத்தான்களை வசப்படுத்திக் கொடுத்து பறவைகளின் பாசைகளையும் கற்றுக் கொடுத்தானோ அது போல் மறுமை நாளின் அடையாளமான தஜ்ஜாலுக்கும் இறைவன் சில அற்புதங்களைக் கொடுத்து நம்மை – நமது ஈமானைச் சோதிப்பான்.

இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் ? இதற்கு மேலும் நான் சொல்வது தான் சரி என்று வரட்டு கவுரவம் பார்த்து நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் அல்லாஹ்வையே சந்தேகப்பட்ட ஈமான் இழந்த துற்பாக்கிய நிலையை நீங்கள் அடைந்து விடுவீர்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

குருட்டு வாதம் 05


தஜ்ஜால் முழு உலகையும் ஆட்சி செய்வான் என்பது பிரிடிஷ் காரர்களின் ஆட்சியைக் குறிக்கும்.
தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.

இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.

மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான் தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க முடியாது. இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து சென்று விட்டார்கள் ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.  

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
நமது பதில்

மார்க்கத்தில் தான் நீங்கள் அறை குறை என்றால் உலக அறிவிலும் நீங்கள் ஒரு அறை குறைதான் என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துவிட்டீர்கள்.

உலகின் அனைத்து நாடுகளையும் பிரிட்டிஷ் ஆட்சி செய்தது என்பதை எந்த வரலாற்றில் படித்தீர்கள்? கொஞ்சம் காட்டுவீர்களா? நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

நீங்கள் எல்லாம் ராக்கட் பற்றி பொது அறிவு பேசுகிறீர்கள்?

தஜ்ஜால் முழு உலகையும் ஆழ்வான் என்றும் ஆதலினால் தஜ்ஜால் என்பவன் கிருத்தவர்கள் என்று சொன்னீர்கள் தஜ்ஜாலின் வாழ்நாளைப் பற்றி நபியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),  நூல்: முஸ்லிம் 5228

தஜ்ஜால் இந்த உலகில் நாட்பது நாட்கள் தங்குவான் என்று நபியவர்கள் கூறுகிறார்கள் இந்த நாட்பது நாட்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் வருடம், தசாப்தம், நூற்றாண்டு எதையும் சொல்ல முடியாத அளவுக்கு நபியவர்களே விளக்கம் சொல்லிவிட்டார்கள்.

தஜ்ஜால் இந்த உலகில் 40 நாள் தங்குவான் என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள் கிருத்தவர்கள் நாட்பது நாள்தான் வாழ்கிறார்களா?

தஜ்ஜாலின்  ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இப்படித்தான் கிருத்தவர்களின் வாழ்நாளும் இருக்கிறதா?

அப்படி வாழ்நாள் கொண்ட ஒரு கிருத்தவரையாவது இப்போது காட்டுவீர்களா?

இறுதியாக……………………….

அன்பின் சகோதரர் அவர்களே !

வரட்டு கவுரவத்தையும், குருட்டு வாதங்களையும் விட்டு விட்டு தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதற்கு முன்வாருங்கள் என்று அன்பாய் அழைக்கிறோம்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதிவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(அல்குா்ஆன் 5-2) No comments: