July 12, 2011

தஸவ்வுப் கோட்பாடும், வழிகெட்ட தரீக்காக்களும்.இஸ்லாத்தின் தூய்மைத் தன்மையைப் பாழ்ப்படுத்தி, வழி கெட்ட சிந்தனைகளை விதைத்து, முஸ்லீம்களை வழி தவறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைகளில் மிகவும் பாரதூரமான, பயங்கரமாக கொள்கையாக இருப்பது தஸவ்வுப் என்ற சூபித்துவக் கொள்கையாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லீம்களின் பெயரால் தோன்றிய வழி கெட்ட இந்த அமைப்பினர் தங்கள் கொள்கையை இந்து மற்றும் கிருத்தவ மதங்களில் இருந்து இறக்குமதி செய்தார்கள் என்றும், இன்னும் சிலர் கிரேக்க தத்துவங்கள் மற்றும் பாரசீக வழிகெட்ட கொள்கைகளில் இருந்து பெறப்பட்டவைகள் என்றும் விளக்குகிறார்கள்.

எது எப்படியோ எங்கிருந்து இறக்குமதியானது என்பது நமக்கு தேவையற்றது. எங்கிருந்து இஸ்லாத்தின் பெயரில் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டிருந்தாலும் அவைகள் வழிகேடுகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிருத்தவம், இந்து அல்லது கிரேக்க மற்றும் பாரசீக கொள்கைகள் அனைத்திலும் இருக்கும் இந்த வழிகெட்ட கொள்கை இஸ்லாத்தின் பெயராலும் அரங்கேற்றப்படுவது தான் கவலைக்குறியதாகும்.

தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் அல்லது சூபித்துவம் என்றால் அனைத்தையும் துறந்து உள்ளத்தை ஒரு முகப்படுத்தி, தூய்மைப் படுத்துதல் என்று வரைவிலக்கணப் படுத்தப்படுகிறது.

இப்படி சொல்பவர்கள் மனிதர்களின் நிலையை நான்காகப் பிரித்து நோக்குகிறார்கள்.

ஷரீஅத் 

தரீக்கத் 

ஹக்கீகத் 

மஃரிபத் 

இந்த நான்கில் சாதாரன மனிதர்களைக் குறிக்க ஷரீஅத்தைப் பயன்படுத்துவார்கள். அதாவது சாதாரன மனிதர்கள் ஷரீஅத் வாதிகள் இவர்களை விட தரீக்கத்தை ஏற்றிருப்பவர்கள் மேன்மையானவர்களாக கருதப்படுவர்.

ஆனால் உண்மையில் இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெயரிலும், பொருளிலும் எந்த வித்தியாசமும் இதில் காணப்படுவதில்லை.

அதே போல் ஹக்கீகத் என்பது தரீக்கத்திற்கு அடுத்த தரத்திலும் மஃரிபத் என்பது அதற்கும் மேற்பட்ட இடத்திலும் வைத்துப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த நான்கு நிலைக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த்த் தொடர்பும் இல்லை. குர்ஆன் சுன்னாவில் இருந்து எந்த ஆதாரமும் இதற்கு இல்லை.

சிலர் தஸவ்வுப் என்பது ஒரு பெரிய கலை என்றும் அதனை இஸ்லாம் தான் வளர்த்தது என்னும் நமக்கு மத்தியில் கதை அளந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் தான் சூபித்துக் கொள்கையை வளர்த்த்து என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் இருந்து எந்த ஆதாரத்தையும் இது வரைக்கும் அவர்களினால் காட்ட முடியவில்லை. இனிமேலும் காட்ட முடியாது.

ஷரீஅத்தில் தொடங்கி தரீக்கத், ஹக்கீகத், என்று தொடரான நிலைக்கு வந்து இறுதியில் மஃரிபத் என்ற நிலையை அடைபவர் முக்தி பெற்றுவிட்டார் என்பது இவர்களின் கோட்பாடு.

இவர் அனைத்துப் பாவமான காரியங்களுக்குமான வழிகளை வென்றவர் என்று போற்றப்படுவார்.

இதற்குப் பெயர் மெய் ஞானம் என்று சொல்லுவார்கள்.

இந்த மெய் ஞானம் பெற்ற முக்தி நிலையை அடைய வேண்டும் என்றால் முக்கியமான மூன்று கருத்துக்களை முன் வைப்பார்கள்.

பசித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேண்டும்., தனித்திருக்க வேண்டும்.

இந்த மூன்று காரியங்களை செய்தால் முக்தி பெற்ற மெய் ஞானியாக மாறிவிடலாம் என்பதும் அப்படி மாறிவிட்டால் அவர் தொழத் தேவையில்லை என்றும் கடவுளுக்கு சமனான சத்தி அவருக்கு வந்துவிட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

இந்து மதத்தில் இருந்து பெறப்பட்ட இந்த மூன்றையும் சேர்த்து கல்வத் இருத்தல் என்று சொல்லுவார்கள். கல்வத் இருத்தல் என்றால் தனித்திருத்தல் என்று பொருள்.

தனித்திருந்து பாவங்களை விட்டும் தவிர்ந்து ஞானியாக மாறுதல் என்று கூறுவார்கள்.

இப்படி தனித்திருப்பதை ஒரு பெரிய சாதனை போன்று மக்கள் மன்றில் இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மகான் எந்தத் தவறுமே செய்யாதவர், வருடக் கணக்காக தனியாகவே இருந்தார், யாருடனும் பேசுவது கூட இல்லை. இவருக்கு பசியே வருவதில்லை, வருடக் கணக்காக இவர் சாப்பிடவே இல்லை, இவர் தூங்கவே மாட்டார், தூக்கத்தை துறந்து இறைவனுக்காக தியானத்தில் இருப்பார் என்றெல்லாம் காதில் புரூடா விடுவார்கள்.

உண்மையில் இதுவெல்லாம் நடந்தனவா? இன்றும் நடக்கின்றனவா? நடக்க முடியுமா? என்று பார்த்தால் பொய்யின் மொத்த உருவம் தான் இந்த தஸவ்வுப் கொள்கை என்று சொல்ல்லாம்.

இந்த தரீக்கத்து வாதிகள் சொல்லும் மூன்று சித்தாந்தங்களையும் வைத்து அவர்களை உரசிப் பார்த்தாலே உண்மை வெளிவந்து விடும்.

முதலாவது தத்துவம் (?)

இந்த கல்வத்து கூட்டத்தின் முதலாவது கொள்கை பசித்திருக்க வேண்டும் என்பதாகும். அப்படி பசித்திருந்தால் உள்ளம் ஒரு முகப்படுத்தப்பட்டு, முக்தி பெற்ற ஞானியாகி விடலாம் என்பதே இவர்களின் வாதம். இது உண்மை என்றால் குறைந்த்து 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஒரு ஞானியை இவர்களால் காட்ட முடியுமா?

முடியாது என்று சொல்வதற்கு பதிலாக இருந்தார் ஆனால் இப்போது மரணித்து அவ்லியாவாக ஆகிவிட்டார் என்பார்கள் சாப்பிடாமலேயே ஞானியாகிய ஒருவரை கூட காட்ட முடியாது. ஏன் என்றால் அப்படி மனிதர்கள் யாரும் வாழ முடியாது. மனிதனுக்கு அந்த ஆற்றலை இறைவன் கொடுக்கவே இல்லை.

பசி என்பது மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒரு தேவை அப்படி இருக்கும் போது இவர் மாத்திரம் பசித்திருந்தார் சாதனை படைத்தார் என்பதில் என்ன உண்மை இருக்கிறது.

இன்றும் கூட சொல்கிறோம் அப்படி ஒருவர் இருந்தால் நிதர்சனமாகக் காட்டுங்கள்.

இரண்டாவது தத்துவம் (?)

விழித்திரு என்பது இவர்களின் கொள்கை அதாவது இறைவனின் அருளை அடைந்து முக்தி நிலையை அடைய வேண்டும் என்றால் விழித்திருக்க வேண்டுமாம். தூங்கவே கூடாதாம். அப்படி இருந்தால் தான் முக்தி பெற்ற மகானாக மாற முடியுமாம்.

சாப்பிடாமலே இருந்த அல்லது இருக்கும் ஒருவரை எப்படி நிதர்சனமாகக் காட்ட முடியாதோ, அது போல் தூங்காமலே இருந்த ஒருவரைக் காட்டவே முடியாது.

ஏன் என்றால் தூக்கம் என்பதும் மனிதனின் அத்தியவசிய தேவைகளில் ஒன்றாகும் நபிமார்கள் கூட இந்த தூக்கம் என்ற நிலையை அடைந்து தான் இருக்கிறார்கள்.

தூக்கம் அற்றவன் என்றால் அது படைத் இறைவன் மாத்திரமாகத் தான் இருக்க முடியும், அதுதான் கடவுல் தன்மைக்கும் உகந்தது.

ஆனால் தூக்கமே இல்லாதவர்கள் என்று யாரெல்லாம் சொல்லப் படுகிறார்களோ அவர்கள் தினமும் கண்களை மூடிக் கொண்டு ஒருக்கணித்து படுத்தவாறு இருப்பார்கள்.

கேட்டால் தியானமாம்.???????

இதுதான் இவர்களின் தூக்கமில்லாத தியானம்.

மூன்றாவது தத்துவம் (?)

தனித்திருத்தல் என்பதுதான் இவர்களின் மூன்றாவது தத்துவம். பாவங்கள் செய்யக் கூடாது என்பதற்காக இவர்கள் தனித்திருக்கிறார்களாம்.

இது இவர்களின் வீரத்திற்கு அறிகுறியாக வீரவசனமாக முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் உண்மையில் ஞானிகளா? தீமையை செய்யக் கூடாது என்பதற்காக சமுதாயத்தை விட்டே இவர்கள் ஓடி ஒழிகிறார்கள். இப்படி ஓடி ஒழிந்து இருப்பவன் தான் வீரன் என்றால் 10 வருடம் 15 வருடம் என்று வருடக் கணக்கில் சிறையில் இருப்பவன் கூட இவர்களின் கருத்துப்படி ஞானிகள் தான். அவனும் தனித்துத் தான் இருக்கிறான்.

இப்படிப்பட்ட கிறுக்குத் தனமான கொள்கைகளை தன்னகத்தே புகுத்தி வைத்துக் கொண்டுதான் இவர்கள் தங்களை ஞானிகள் என்று மார்தட்டுகிறார்கள்.

இதற்கெல்லாம் இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் நபியவர்கள் தனது நபித்துவத்திற்கு முன்பு ஹீரா என்ற குகையில் இருந்ததுதான்.

நபியவர்கள் எப்படி ஹீராக் குகையில் தனித்திருந்து தியானித்தார்களோ அப்படி நாங்களும் தனித்திருந்து தியானிக்கிறோம் என்பது இவர்களின் வாதம்.

இது ஏற்புடைய வாதமா என்றால் இல்லவே இல்லை.

நபியவர்கள் நபித்துவம் தனக்கு வழங்கப்படுவதற்கு முன்பு ஹீரா குகையில் தனிமையில் இருந்தது உண்மைதான். நபியாக ஆகுவதற்கு முன்பு போய் தியானத்தில் இருந்தவர்கள் தான் நபியானதின் பின்னால் போய் இருக்கவில்லையே?

நபியாக இருந்து முஹம்மத் நபியவர்கள் எதையெல்லாம் வழிகாட்டினார்களோ அதைத் தவிர மற்ற எதுவும் வழிகாட்டியாகக் கொள்ளப்படாது என்பது சாதாரண மனிதனும் அறிந்த ஒன்றுதான்.

அடுத்து இன்னும் சிலர் இது நபியினதும், ஸலபுஸ் ஸாலீஹீன்களினதும் வழி முறை என்றும் வாதிடுகிறார்கள். இவர்களின் இந்த வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. ஏன் என்றால், நபியவர்களின் காலத்திலேயே இப்படி கல்வத்து இருக்கப் போவதாக வாதிட்டவர்களை நபியவர்கள் கண்டித்து அனுப்பியுள்ளார்கள். ஒரு வாதத்திற்காக ஸலபுகள் அப்படி செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அது மார்க்கமாக மாறாது.

குர்ஆனும், சுன்னாவும் மாத்திரம் தான் மார்க்கமாக இறைவனின் அங்கீகரிக்கப்படும்.

நபியவர்களின் காலத்திலேயே நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.

அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன் என்றார்.

இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார்.

மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி -5063 )

மேற்கண்ட செய்தி உணர்த்தும் தகவல் என்ன? மூன்று பேர் வருகிறார்கள் ஒருவர் இரவு முழுவதும் தொழுது கொண்டே இருக்கப் போவதாக சொல்கிறார். இரண்டாவது நபர் ஒரு நாள் கூட விடாமல் காலம் முழுவதும் நோன்பு நோற்கப் போகிறேன் என்கிறார். மூன்றாவது நபரோ தான் திருமணமே செய்து கொள்ளாமல் பெண்களை விட்டும் ஒதிங்கியிருக்கப் போவதாக சொல்கிறார்.

சூபியாக்கள் சொல்வதைப் போல் ஒரு நிலை இஸ்லாத்தில் இருக்கும் என்றால் நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழர்களின் கருத்துக்களை வரவேற்றுப் பாராட்டியிருக்க வேண்டும்.

ஆனால் நபியவர்களோ அதனை கண்டிக்கிறார்கள். கண்டிக்கும் நபியவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமாக கவணிக்கத் தக்கதாகும். உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன்.  என்று சொல்லி விட்டு என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்  என்று தெளிவாக இப்படிப்பட்டவர்களுக்கு உரிய மார்க்கத் தீர்ப்பையும் நபியவர்களே வழங்கிவிடுகிறார்கள்.

அன்பின் இஸ்லாமி நெஞ்சங்களே!

ஷாதுலிய்யா, காதிரிய்யா, நக்ஷபந்திய்யா என்று எந்த பெயரை வைத்துக் கொண்டாலும் சரி எந்த நாட்டில் இவர்கள் வாழ்ந்தாலும் சரி இவர்களின் கொள்கைக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றும் இந்த வழிகேட்டிற்கு மறுமையில் நிச்சயம் மாட்டிக் கொண்டு கைசேதப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிப்பட்ட வழி கெட்ட கொள்கைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக. 

No comments: