July 16, 2011

அரசியலாக்கப்படும் “ரிசானா நபீக்” விவகாரமும், விமர்சிக்கப்படும் இஸ்லாமிய குற்றவியல் சட்டமும்.இலங்கை அரசியல் அரங்கில் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் கையில் தற்போது கையில் எடுத்துள்ள விஷயம் “ரிசானா நபீக் விடுதலைக்கு அரசாங்கள் எதுவும் செய்யவில்லை” என்ற கோஷமாகும்.

ரிசானா நபீக் விஷயமாக மாற்று மத அன்பர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள், அரசியல் கட்சிகள் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு பெரிதாக்க வேண்டும்? முஸ்லீம்கள் இந்த விஷயத்தில் எத்தகைய நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திகளை ஆராய்வதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூதூர் என்ற முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஊரைச் சேர்ந்தவர் சகோதரி ரிசானா நபீக்.

இவர் கடந்த 2005ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்பிற்காக சென்றார். அவர் வேலை செய்த இடத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரிசானாவிற்கு ஆதரவாக பல அமைப்புக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

நடந்தது என்ன?

கடந்த 2005ம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற ரிசானா தனது எஜமானரின் குழந்தையை கொலை செய்தார் என்பதே ரிசானா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டாகும். இந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு ரிசானா குறிப்பிட்ட குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து சவுதி தவாமி நீதி மன்றம் ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தவாமி நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதி மன்றத்தில் ரிசானாவுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த மேன் முறையீட்டின் விசாரனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரியாத் உயர் நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அப்துல்லாஹ் அல் ரவ்சாமி தலைமையிலான மூன்று பேர்களை கொண்ட நீதிபதிகள் குழு ரிசானா நபீக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு உண்மையானதும், நிரூபிக்கப்பட்டதுமாகும் என்று தீர்ப்பு வழங்கி, ரிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்கள்.


இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், ரவுப் ஹக்கீம் போன்றவர்கள் ரிசானா நபீக் விஷயத்தில் சவுதி அரசு மண்ணிப்பு வழங்க வேண்டும் என்று சவுதியை கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரிசானாவை விடுவிக்கும்படி கோரிக்கை வைத்து சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம் எழுதினார்.

ஆசிய மனித உரிமைகள் அமைப்பு முதல் இலங்கை எதிர்க்கட்சிகள் வரை ரிசானாவை விடுதலை செய்யும்படி அறிக்கை வெளியிடுவதும், போராட்டங்கள் நடத்துவதுமாக ரிசானாவின் விஷயத்தை பல தரப்பாலும் அரசியலாக்கிவிட்டார்கள்.

கட்சிகளின் அரசியல் நோக்கம் என்ன?

இன்று பல கட்சியினரும் ரிசானா நபீக் தொடர்பான தங்கள் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார்கள். அவ்வப்போது சிலர் போராட்டங்களையும் நடத்துகிறார்கள்.

ரிசானாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அனைவரும் ரிசானாவை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?

இளம் வயதுப் பெண்.

அவருடைய குடும்பம் வருமையில் உள்ளது.

தங்குவதற்கு ஒரு சரியான வீடு கூட இல்லை.

இது போன்ற காரணங்கள் கூறப்பட்டு ரிசானா நபீக் மீது நாடளாவிய ரீதியில் ஒரு அனுதாப அலையை உருவாக்கியுள்ளார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

ரிசானா மீது ஏற்படுத்தப்படும் அனுதாப அலைகள் ரிசானாவை நிரபராதி என்று சொல்வதற்குறிய ஆதாரங்கள் இல்லை. ரிசானா தவறு செய்யவில்லை என்றால் அதனை அவர் நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.

ஆசிய மனித உரிமைக் கழகம் மற்றும் சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து ரிசானாவுக்காக நடத்திய வழக்கில் ரிசானா தரப்பின் கருத்தை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பிட்ட குழந்தை கொலை செய்யப்பட்டுத்தான் இறந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க இல்லை ரிசானா மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் புகுத்தப்படுகிறது.

இந்தச் சட்டம் கொடூரமானது என்றெல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் சில முஸ்லீம் பெயர் தாங்கிகளும் கூக்குரலிடுவது இஸ்லாமிய சட்டத்தை கேவலப்படுத்துவதாகும்.

இலங்கை முஸ்லீம் உரிமைகள் அமைப்பின் போராட்டமும், ரஞ்சன் ராமநாயக்கவும்.

ரிசானா நபீக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று இலங்கையில் கருத்து வெளியிடுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்கள் இலங்கை முஸ்லீம் உரிமைகளுக்கான அமைப்பினர்.

இவர்கள் ரிசானாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தவறானது எனக் கூறி ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய குற்றவியல் தொடர்பான அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை நிர்வாகிகளாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, கூடவே சில அரசியல் வாதிகளையும் தம் தரப்புக்கு ஊது குழலாக்கியுள்ளது.

எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்க, கொழும்பு மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் தாம் தற்போது ரிசானாவின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள்.

இவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் ஷரீஆ சட்டத்தை இவர்கள் விமர்சித்தமை இங்கு கண்டிக்கத் தக்கதாகும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் கண்டிக்கபட வேண்டியவர்களே.

ரஞ்சனுக்கும், முஜிபுர் ரஹ்மானுக்கும் முஸ்லீம்களிடம் தங்களுக்கு இல்லாமல் போன அரசியல் மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக தற்போது கிடைத்திருக்கும் செய்திதான் இந்த ரிசானா நபீக் விவகாரம்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சவுதி மன்னருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த சவுதி மன்னர் ரிசானா நபீகை மன்னிக்கும் அதிகாரம் தனக்கில்லை என்றும் அந்த அதிகாரம் பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்க மாத்திமே உள்ளதாகவும், அவர்கள் மன்னித்தால் ரிசானா விடுவிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவணிக்கத் தக்கதாகம்.

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முஜீபுர் ரஹ்மான் போன்றவர்கள் சவுதி மன்னரின் இந்த பதிலை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் ரிசானாவின் அனுதாப அலையைச் சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் இந்தப் போராட்டங்களினால் எந்தப் பிரயொஜனமும் ரிசானாவுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை ரிசானாவை சிறையில் சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக சந்தித்த இலங்கை மத்திய மாகாணம் கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் கிபாயா அவர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.

இலங்கையின் நிவ் லங்கா டுடே இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாவது.

நான்   தன்னிச்சையாகவே ரிஸானாவின்  விடயத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.  ரிஸானா  அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை நான் தொழில் செய்யும் ரியாத்திலிருந்து 470  கிலோ மீட்டருக்கப்பால் இருக்கிறது.  நான் ரிஸானாவை  சுமார் 15 தடவைகள் சிறையில் சந்தித்திருக்கிறேன்.

ஷரீஆ  சட்டத்தைப் பற்றி சரியாகப் பரிந்து கொள்ளாதவர்களே சவூதி அரேபியாவின்  சட்டம் கடினமானது என விமர்சிக்கிறார்கள். நான் ரிஸானாவை சந்திக்க அனுமதி  கோரிய  போதெல்லாம் சவூதி அதிகாரிகள்  எனக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.

சிறைச்சாலை என்றதும் எமது நாட்டிலுள்ள இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சங்கிலிகளையும் கற்பனை செய்து கொண்டே இங்குள்ளவர்கள்  சவூதியை விமர்சிக்கிறார்கள். ஆனால் ரிஸானா  சிறை வைக்கப்பட்டுள்ள இடம் வீட்டுச் சூழலை  ஒத்ததாகும். 

நான்  ரிஸானாவைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவள் மிகவும் தெளிந்த மன நிலையில் காணப்படுகின்றாள். என்னை நோனா என்று அழைப்பாள். நான் அவளிடத்தில் நெருக்கமாகப் பேசும்போது என்னுடன் சாச்சி (சிறிய தாயார்) என்று உரிமையுடன் பேசுவாள். உம்மாவுடன் டெலிபோனில் பேச வேண்டுமா? என்று கேட்டால் உங்களுக்கு பணம் செலவாகுமே என்று என்னிடத்தில் 

கேள்வி எழுப்புவாள். மூதூரிலுள்ள  தாயாருடன்  பேச தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தால் உறவினர்களும் பேசுவார்கள்.

சிறைச்சாலையில்  தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் அவளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

ரிஸானாவின்  தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களும் சமூகமும்  80 முதல்  90 வீதமான அபிப்பிராயங்கள் அவளது விடுதலையையே ஆதரிக்கின்றன.

ரிஸானா சிறு வயதுக்காரி அவளுக்கு இத்தண்டனை கூடாது என்று போராடுகிறார்கள். ஆனால் சவூதி பதிவுகளும் கடவுச்சீட்டு விபரங்களும் அப்படி இல்லை. எனவே அவள் சிறுமி என்ற வாதத்திற்கே இடமில்லை. 

விரும்பியோ, விரும்பாமலோ இந்தப் பொறுப்பை இலங்கை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தத் தவறு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ரிஸானாவின்  விடுதலை  தொடர்பாக நடாத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களும்  ஊர்வலங்களும் மிக மோசமான  பின்விளைவுகளை  ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைகள் ஒரு போதும்  அவரது விடுதலைக்கு  உதவமாட்டாது. மாறாக  இது ஆபத்தையே உண்டு பண்ணும்.

சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ரிஸானா விடயத்தில் தலையிட்டி ருக்கும்போது அரசும் சர்வதேசமும் ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் வாதம் அரசியல் மேடைகளுக்கும் கோஷங்களுக்கும் உதவுமே தவிர ரிஸானாவின் விடுதலைக்கு  அவை  ஒரு போதும் உதவமாட்டாது.  

ஜனாதிபதி  சவூதி மன்னருக்கு எழுதியுள்ள உருக்கமான  கடிதம் சவூதி மன்னரின் கவனத்தை ஈர்க்கும்  என்று நம்புகிறேன் என்றாலும்   மன்னருக்கு கூட மன்னிப்பு வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து அவர்களிடத்தில் மன்னிப்பு தொடர்பான வேண்டுகோளை மாத்திரம் மன்னரினால் முன்வைக்க முடியும். இந்த விடயம் மாத்திரமே நடைபெற வேண்டி இருக்கிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கொடூரமானவையா?

"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் "நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே'' என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.

சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.

மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் "ஆறு மாதம் சோறு போடலாம்'' எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் "பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்'' என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது'' என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?'' என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!'' என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.

கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் "எடுத்தேன்; கவிழ்த்தேன்'' என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)

(பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்.)

பெண்களிடம் ஓர் வேண்டுகோள்.

அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! சகோதரி ரிசானா நபீக் இன்று ஒரு கொலையாளியாக நம் முன் நிற்பதற்கான காரணம் உழைப்பிற்கான தனது வெளிநாட்டுப் பயணம் தான்.

மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்வது இலங்கையில் தான் அதிகமாக உள்ளது.

இஸ்லாத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை நமக்கு ஏற்படவே மாட்டாது என்பதுதான் உண்மையாகும். இஸ்லாமிய சட்டத்தில் பெண்கள் உழைக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டமே கிடையாது உழைப்பதை ஆண்களுக்குத்தான் இஸ்லாம் கடைமையாக்கியுள்ளதே தவிர பெண்களுக்கு அல்ல.

தந்தையர்களே! கணவர்களே!

உழைப்பது உங்கள் மீது கடமை என்று இஸ்லாம் தெளிவாக தெரிவித்துள்ள போது அதனை மீறி உங்கள் மனைவியரை, பிள்ளைகளை நீங்கள் வேலை வாய்பைத் தேடி வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயமானது. உங்கள் மனம் உறுத்தவில்லையா? நீங்கள் செய்யும் இந்த கேவலமான செயல்பாட்டினால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமே விமர்சிக்கப்படுகிறதே இதை நீங்கள உணர வேண்டாமா?

இது தொடர்பான விரிவான ஆக்கம் ஒன்றை நமது தளத்தில் கூடியவிரைவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.

2 comments:

Deen Noor said...

இது தொடபாக அரசியல் வாதிகளையும், அன்னிய மதத்தவவர்களையும் ஏன் முஸ்லிம்களையும் வழி நடத்த தவறிய எமது ஜமியத்துல் உலமா, உலமாக்கள், மொளவிமார்கள், தஃவா பணியில் ஈடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள், ஷரீயாவை முறையாக கற்ற புத்தி ஜீவிகளுமே பொறுப்பு சொல்ல வேண்டும்.

அரசியல்வாதிகளும், ஏனையோரும் இது தொடர்பாக தவறான உத்திகளை கையாளும் போது, இவர்களை ஷரீயா (இஸ்லாமிய) முறைப்படி வழி நடத்த இவர்கள் யாரும் முன் வரவில்லை. சமூகம் வழி கெட்ட நிலையில் இருக்கின்ற போது இவர்கள் பாராக முகமாக இருந்தர்கள்.

உண்மையை உரைத்து இஸ்லாத்தை முன்வைக்க முன் வர, அனைவரும் தயங்கிய இந் நிலையில் உங்களுடைய இந்த கட்டுரை எனக்கு ஓரளவு மனநிறைவை தருகிறது. அல்ஹம்துல்லிலாஹ்.

இது சம்பந்தமாக நானும் இதே நிலப்பாட்டில் இருந்ததால் முடியுமான வரை இந்த கருத்தை முன் வைக்க பல தடவைகள் முயற்சி செய்துள்ளேன்.

இது தொடர்பில் அன்நிய மதத்தவர்கலாள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள், அபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த அவா.

யா அல்லாஹ் எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக! ஆமீன்

Deen Noor said...

இது தொடபாக அரசியல் வாதிகளையும், அன்னிய மதத்தவவர்களையும் ஏன் முஸ்லிம்களையும் வழி நடத்த தவறிய எமது ஜமியத்துல் உலமா, உலமாக்கள், மொளவிமார்கள், தஃவா பணியில் ஈடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள், ஷரீயாவை முறையாக கற்ற புத்தி ஜீவிகளுமே பொறுப்பு சொல்ல வேண்டும்.

அரசியல்வாதிகளும், ஏனையோரும் இது தொடர்பாக தவறான உத்திகளை கையாளும் போது, இவர்களை ஷரீயா (இஸ்லாமிய) முறைப்படி வழி நடத்த இவர்கள் யாரும் முன் வரவில்லை. சமூகம் வழி கெட்ட நிலையில் இருக்கின்ற போது இவர்கள் பாராக முகமாக இருந்தர்கள்.

உண்மையை உரைத்து இஸ்லாத்தை முன்வைக்க முன் வர, அனைவரும் தயங்கிய இந் நிலையில் உங்களுடைய இந்த கட்டுரை எனக்கு ஓரளவு மனநிறைவை தருகிறது. அல்ஹம்துல்லிலாஹ்.

இது சம்பந்தமாக நானும் இதே நிலப்பாட்டில் இருந்ததால் முடியுமான வரை இந்த கருத்தை முன் வைக்க பல தடவைகள் முயற்சி செய்துள்ளேன்.

இது தொடர்பில் அன்நிய மதத்தவர்கலாள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள், அபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த அவா.

யா அல்லாஹ் எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக! ஆமீன்