April 8, 2012

நரகவாதியாக மாற்றும், தேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்.

நரகவாதியாக மாற்றும்,
தேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்.
RASMIN M.I.Sc 
மனிதர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும், இதமான உறவுஇல்லாமல் போவதற்கும், புரிதலில் தெளிவற்று தவறான புரிதல்கள் உருவாகுவதற்கும்காரணமாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூரு பரப்புதலும் தான் என்றால் அதுமிகையில்லை.

வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் நம்முடைய மனதில் அடுத்தவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை சுமந்து கொள்ளும் அந்த தீய எண்ணங்கள் குரோதமாக மாறி, தான் கொண்ட தவரான எண்ணத்தை அவதூராக பரப்பும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விடும்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, தன்மை முஸ்லிமாக பிரகடனம் செய்து தன் வாழ்வை அழகிய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் தேவையற்ற சந்தேகத்தையும், அதன் மூலம் உருவெடுக்கும் அவதூறு பரப்புதலையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஷைத்தான் மனிதனை பாவத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்குக் கையாலும் மிக எளிய முறை தீய எண்ணங்களை உருவாக்குவது என்று புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் தவிர்ந்து கொள்ளும்படி மிகவும் கண்டித்துக் கூறும் பாவங்களில் மிக முக்கிய பாவமாக இந்த பாவங்கள் அமைந்திருக்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

மேற்கண்ட வசனத்தில் பொதுவாக மனிதர்களை அழைத்து இறைவன் பேசாமல் குறிப்பாக நம்பிக்கை கொண்டவர்களை அழைத்துப் பேசுகின்றார். காரணம் இந்தப் பாவத்தைப் பொருத்த வரையில் சர்வ சாதாரணமாக அனைவரும் இதில் ஈடுபடுவார்கள். இறைவனை நம்பி, நரகத்தை பயந்து வாழக்கூடியவர்கள் மாத்திரம் தான் இந்தப் பாவத்தில் இருந்து விளகி வாழ முடியும். அல்லாஹ்வை யாரெல்லாம் பயப்படவில்லையோ அவர்கள் இந்தப் பாவத்தை சாதாரணமாக நினைத்து தினமும் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

"பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5143.

பிறர் மீது கெட்ட எண்ணன் கொள்வது குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்ததும் அதைப் பற்றி விளக்குகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். பேச்சுக்களில் மிகவும் பொய்யான பேச்சு கெட்ட எண்ணத்தில் உருவாகும் பேச்சுதான் என்று தெளிவாக்குகிறார்கள்.

கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் போது நிறைய பொய்களை சேர்த்து பேச வேண்டிய நிலை உருவாகிவிடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம்.

அதனால் தான் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்க்காதீர்கள் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களாக இருந்து கொள்ளுங்கள் என்று அழகிய முறையில் உபதேசம் சொல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6.

சிலர் அடுத்தவர்கள் பற்றி எதைக் கேள்விப் பட்டாலும் உடனே அதைப் பரப்புவதற்கு முன்வந்து விடுவார்கள். அதைப் பற்றி ஆய்வு செய்வதோ, அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதோ இல்லை. உடனே அதைப் பற்றி பரப்ப ஆரம்பித்து விடுவர்.

இப்படி யாராவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று நபியவர்கள் தெளிவாக்குகின்றார்கள்.

பொய் என்பது திட்டமிட்டு உருவாக்கி சொல்வது மட்டுமல்ல கேள்விபட்டதை எல்லாம் ஆய்வு செய்யாமல் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றுதான்.

உலகின் சிறு இன்பத்திற்காக மறுமையில் திவாலாகலாமா?

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும், பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான்.  இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4678

திவாலாகியவர்கள் யார் என்று நபி கேட்டவுடன், அனைத்து ஸஹாபாக்களும் பொருளாதாரத்தில் குறையுள்ளவர்கள் தான் திவாலாகிப் போனவர்கள் என்று பதில் சொல்கிறார்கள் ஆனால் நபியவர்களோ அதை மறுத்து உண்மையில் திவாலாகுதல் என்றால் என்ன என்பதை விபரிக்கிறார்கள்.

நிறைய நன்மைகளை சம்பாதித்து மலை போல் சுமந்து கொண்டு வருபவர்கள் பலர் உலகில் நன்மை செய்த்தைப் போலவே அடுத்தவர்களின் உரிமையைப் பரிக்கும் விதமாக, மற்றவர்களின் மானத்தில் விளையாடி, அடுத்தவர்களைத் திட்டியிருப்பார்கள். அவதூராக பேசியிருப்பார்கள். அடுத்தவர்களின் பொருளை சாப்பிட்டிருப்பார்கள். அடுத்தவர்களின் இரத்தத்தை ஓட்டியிருப்பார்கள். இப்படி யாராவது செய்திருந்தால் அவர்கள் மலை போல் கொண்டு வரும் அனைத்து நன்மைகளும் அவர் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு எடுத்து பகிர்ந்து கொடுக்கப்படும்.

இறுதியில் அவரிடம் எந்த நன்மையும் இல்லாமல் போய்விடும். ஆனால் அவர் பற்றிய விசாரனைகள் முடிந்திருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் இறைவன் இந்த மனிதர் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எல்லாம் எடுத்து இவர் தலையில் போட்டு விடுவான். இவர் பாவியாகி இறுதியில் நரகில் தள்ளப்படும் கேவலமான நிலைதான் உருவாகும்.

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பும் வேலையில் ஈடுபடுபவர்கள் மறுமையில் திவாலாகிப் போய் ஒன்றுமில்லாத பாவிகளாக இருப்பார்கள் என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அவதூறு சொல்பவருக்கு 80 கசையடிகள்.

அடுத்தவர்கள் மீது அவதூறான செய்திகளைப் பரப்பி அடுத்தவர்களின் மானத்தில் விளையாடுபவர்களுக்கு அவர்கள் அவதூறு சொல்லியது நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசின் சார்பில் அவர்களுக்கு 80 கசையடிகள் அடிக்கப்பட வேண்டும் என்று இறைவன் திருமறைக் குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சியங்களைக் கொண்டுவராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம் புரிபவர்கள்.(24:4)

யாரெல்லாம் மற்றவர்கள் மீது அவதூறு பரப்புகின்றார்களோ அவர்களை எண்பது கசையடிகள் அடிப்பதுடன், அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அல்லாஹ் சொல்லிவிட்டான். அவதூறு பரப்பியவன் வேறு எந்தப் பிரச்சினைக்காவது சாட்டி சொல்ல வந்தால் அவனுடைய சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே திருமறைக் குர்ஆனின் உபதேசமாகும்.

நமது சுய இலாபத்திற்காக பெரும் பாவத்தில் ஈடுபட்டு நன்மைகளையும் இழந்து கசையடியும் பெற்றுக்கொள்ள வேண்டுமா?


அவதூறினால் பாதிக்கப்படுபவனின் மன நிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்தவர்கள் பற்றி நாம் கொள்ளும் தீய எண்ணங்கள் காரணமாக அவர்கள் பற்றி அவதூறு செய்திகளை அள்ளி வீசுகின்றோம். அப்படி அவதூறு செய்திகளை சொல்லும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் கவுரவத்தை பாதுகாக்க, மரியாதையை இழக்க விரும்பாமல் அவர்கள் படும் பாட்டை அவரவர் அனுபவித்தால் தான் உண்மை புரியும்.

ஆம் நபியவர்களின் அன்பு மனைவி அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது விபச்சாரம் செய்துவிட்டார்கள் என்று அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

அந்நேரம் அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எவ்வௌவு பாடுபட்டார்கள்? நபியவர்கள் எவ்வௌவு பெரிய சங்கடத்திற்கு ஆளானார்கள்? இது போன்ற நிலை நமக்கு ஏற்பட்டால் அதைத் தாங்கிக் கொள்வோமா? செய்யாத குற்றத்திற்காக அவதூறாக நாம் தூற்றப்படும் போதுதான் அதன் பாரதூரமான  விளைவை உணர முடியும்.

அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் பட்ட அவஸ்தையைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.  அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.

இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது.  எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.  நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆகவே நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன். அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப் படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர்.

அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கிய போதும் அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.

அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள்.  படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை.

நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன்.

படை புறப்பட்டுச் சென்றதற்குப் பின்னால் (படையினர் தவற விட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னைக்) கண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார்.

அவர் என்னை அறிந்து கொண்டு, "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கின்றோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் எனது முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்'' என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை.

பிறகு அவர் விரைவாக தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். 

இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு செய்வதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப் பட்டிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அந்த தீய சொல்லில் ஒரு சிறிதும் நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்ற பகுதியை நோக்கிச் சென்றோம்.

நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இவ்வாறு நாங்கள் புறநகர் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தோம்.

எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் சென்று கொண்டிருந்தோம். அவர் அபூ ருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ஸல்மா) பின்த் ஸக்ர் பின் ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயார் ஆவார். மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் என்பார் உம்மு மிஸ்தஹின் மகன் ஆவார்.

உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைத் தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார்.  உடனே அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தன் மகனைச் சபித்தவராகக்) கூறினார். நான், "மிக மோசமான சொல்லைச் சொல்லி விட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்'' என்று கூறினேன்.

அதற்கு அவர், "அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்பட வில்லையா?'' என்று கேட்டார்.  என்ன சொன்னார்? என்று நான் கேட்க, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அந்தச் செய்தியை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு, என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது.

நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து ஸலாம் கூறி விட்டு, "எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார்கள்.  அப்போது நான், "என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டேன்.

உண்மையிலேயே அப்படி ஒரு செய்தி நிலவுகின்றதா? என்று விசாரித்து என் பெற்றோரிடம் உறுதி செய்து கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்.  நான் என் தாய் வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம், "அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கின்றார்கள்'' என்று கேட்டேன்.  என் தாயார், "அன்பு மகளே! உன் மீது சொல்லப்படும் இந்த விஷயத்தைப் பற்றி பெரிது படுத்திக் கொள்ளாதே!  அல்லாஹ்வின் மீதாணையாக!  சக்களத்திகள் பலரும் இருக்க, தன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து, அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமல் இருப்பது மிகவும் குறைவேயாகும்'' என்று கூறினார்கள்.

நான், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்'' என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை) பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும் உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள்.  அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது.  உஸாமா அவர்கள், நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தான் கொண்டிருந்த பாசத்தையும் வைத்து ஆலோசனை சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியரிடம் நல்ல குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று உஸாமா கூறினார்கள்.

அலீ அவர்களோ, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். பணிப் பெண் பரீராவைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, "பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவது பார்த்திருக்கின்றாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, "தங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய் விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும். அத்தகைய கவனக்குறைவான இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படி தோழர்களிடம் கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் வதந்தி கிளப்பி எனக்கு மன வேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன்.  அவர்கள் ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன்.  என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.

உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அவனைத் தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகின்றேன். அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகின்றோம்.  எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். நாங்கள் தங்களது உத்தரவை நிறைவேற்றுகின்றோம்'' என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான ஸஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார்.  இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார்.  ஆயினும் குலமாச்சரியம் அவரை உசுப்பி விடவே ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லி விட்டீர்.  அவனை நீர் கொல்ல மாட்டீர்.  அது உம்மால் முடியாது.  அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப் படுவதை நீர் விரும்ப மாட்டீர்'' என்று கூறினார்.

உடனே, ஸஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து, ஸஅத் பின் உபாதா அவர்களிடம், "நீர் தாம் தவறாகப் பேசினீர்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்.  நீர் ஒரு நயவஞ்சகர்.  அதனால் தான் நயவஞ்சகர் சார்பாக வாதிடுகின்றீர்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர்.  நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி, அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப் படுத்தினார்கள்.  பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை.  காலையானதும் என் தாய், தந்தையர் என் அருகேயிருந்தனர். 

நானோ, இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க, என் ஈரல் பிளந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை.  என்னை உறக்கமும் தழுவவில்லை. 

என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள்.  நான் அவளுக்கு அனுமதி அளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ஸலாம் கூறி அமர்ந்து கொண்டார்கள்.  என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை.  ஒரு மாத காலம் என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் படாமலேயே இருந்து வந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, "நிற்க! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது.  நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான்.  நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி, அவன் பக்கம் திரும்பி விடு, ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது.  அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை.  நான் என் தந்தை அபூபக்ர் (ரலி) யிடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன்.  அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள்.

நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன்.  அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள்.

அதற்கு நான், "நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன்.  குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன்.  இந்நிலையில் அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.  அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.  ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை. 

நான் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவள் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான் சொல்வதை உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக!  எனக்கும் உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நபி யஃகூப் (அலை) அவர்களையே உவமையாகக் கருதுகின்றேன்.  (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது.  நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்பு கோர வேண்டும் (அல்குர்ஆன் 12:18)'' என்று கூறினேன்.

நான் அப்போது குற்றமற்றவள் என அல்லாஹ் அறிவான் (அந்த அல்லாஹ்) நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் வேறு பக்கமாகத் திரும்பி படுத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ - வேத வெளிப்பாட்டை (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.  அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது.  மாறாக, என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள்' என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை.  வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை.  அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப் படத் தொடங்கி விட்டன.  உடனே (வஹீ வரும் நேரத்தில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது.  அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.  அவர்கள் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, "ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்'' என்று கூறினார்கள்.

உடனே என் தாயார், "அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று என்னிடம் கூறினார்கள்.  அதற்கு நான், "மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன்.  அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ், "(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (அல்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான்.  என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2661

செய்யாத குற்றத்தை அவதூராக பரப்பியதின் காரணமாக அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் பட்ட வேதனை நினைத்துப் பாருங்கள் இந்த நிலை யாருக்காவது ஏற்பட்டால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

ஊரார் பார்வையில் கெட்ட பெயர். கணவனிடத்தில் கெட்ட பெயர். என்று அனைவரும் கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் நிலை யாருக்காவது ஏற்பட்டால் அதை அவர் எப்படித் தாங்கிக் கொள்வார்?

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் இதைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவதையும், அதன் மூலம் அடுத்தவர்களின் மனதைப் புன்படுத்துவதையும் அன்றாடம் நாம் பார்த்து வருகின்றோம்.

நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் கூறும் உபதேசம்.

அவதூறு சொல்வதின் விபரீதத்தைப் பற்றி அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் 24வது அத்தியாயமான சூரா அந்நூரில் 11வது வசனம் தொடக்கம் 20வது வசனம் வரை தொடர்ந்து பேசுகின்றான். நபியவர்களின் அன்பு மணைவி அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட நேரம் தான் இந்த வசனங்கள் இறக்கப்பட்டன. இதைப் படிப்பவர்கள் அவதூறு என்ற கொடிய செயலின் விபரீதத்தை தெளிவாக விளங்கெடுக்க முடியும்.

இதைச் (அவதூறான செய்தியை) செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 24:12)

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ் விடம் பயங்கரமானதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 24:15)

"இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 24:16)

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந் தால் ஒரு போதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞான மிக்கவன். வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 24:17,18,19)

அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) (அல்குர்ஆன் 24:20)

இறுதியாக..

உலகில் எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டுதலைத் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்? எப்போது சொன்னார்? சொன்னாரா இல்லையா? இவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பின் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு தான் நாம் அதைப் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி உடனே அதனைப் பரப்ப முற்பட்டால் அவனை விட பொய்யன் யாரும் இல்லை.

ஆக அன்பின் சகோதரர்களே நாம் உண்மையான முஃமின்களாக அல்லாஹ்வை நம்பியவர்களா இருந்தால் மற்றவர்கள் மேல் தேவையற்ற கெட்ட எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், அவதூறான செய்திகளைப் பரப்பாமலும் வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

No comments: