November 25, 2020

ஜேர்மனி முஸ்லிம் மருத்துவர் தலைமையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து

44,000 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் 90% வெற்றி.

டாக்டர். உகர் ஜாஹின் (Ugur Sahin) - கொரானாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததின் மூலம் குறுகிய காலத்தில் மிக பிரபலமான நபராக மாறிவிட்டார்.

2019-ல் இவருக்கு முஸ்தபா விருது அறிவிக்கப்பட்ட போது இவருடைய ஆய்வுப்பணிகள் மேலதிகமாக வெளிச்சத்திற்கு வந்தன. முஸ்லிம் உலகின் நோபல் பரிசு என சயின்ஸ் இதழால் வர்ணிக்கப்படும் முஸ்தபா விருதுகள் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படுகிறது.

எப்படியான போட்டியில் இருந்து இவர் முஸ்தபா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விசயம். 52 நாடுகளை சேர்ந்த 202 ஆய்வு நிறுவனங்களில் இருந்து 512 முஸ்லிம் விஞ்ஞானிகளின் அறிவியல் பங்களிப்புகள் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் 200 பல்கலைக்கழகங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள்/பேராசிரியர்கள் மேற்சொன்ன ஆய்வுப்பணிகளை மதிப்பீடு செய்தனர். முடிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஐவரில் உகர் ஜாஹினும் ஒருவர்.

"இஸ்லாமிய உலகில் இருந்து வரும் ஆய்வாளர்களின் பணிகளை கண்டறிந்து அவர்களை கண்ணியப்படுத்தும் இவ்விருதை எனக்களித்து கவுரவப்படுத்தியதற்கு மகிழ்ச்சியடைகிறேன். உலகில் நாம் நூறு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறோம். இருப்பினும், நாங்கள் இங்கே ஜெர்மனியில் ஈடுபடும் ஆய்வுப்பணிகள் குறித்து இவ்விருது குழுவினர் அறிந்திருப்பதும், அதற்கான அங்கீகாரத்தை கொடுக்க முன்வந்ததும் என்னை ஆர்வமூட்டுகிறது" என விருது குறித்து கருத்து தெரிவித்தார் ஜாஹின்.

இவருடைய தந்தை ஜெர்மனியில் Ford நிறுவனத்தில் பணிபுரிய, நான்கு வயது சிறுவனாக தன் தாயுடன் துருக்கியில் இருந்து ஜெர்மனிக்கு குடியேறினார் ஜாஹின். 2008-ல் தன் துருக்கிய மனைவியுடன் இணைந்து பையாண்டெக் நிறுவனத்தை தொடங்குகிறார் ஜாஹின். புற்றுநோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு மருத்துவ முறைகளில் கவனம் செலுத்துகிறது பையாண்டெக் நிறுவனம்.

குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க வளர்ச்சியை இந்நிறுவனம் அடைய, கொரானாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இவர்களுடன் இணைகின்றனர் பிரபல மருந்து நிறுவனங்களான அமெரிக்காவின் Pfizer மற்றும் சீனாவின் Fosan.

நோயெதிர்ப்பு மருத்துவ நிபுணரான ஜாஹினின் ஆய்வுமுறைகள் புதுமையானது, வித்தியாசமானது. புற்றுநோய் செல்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபடுகின்றன. அப்படியானால், எல்லோருக்கும் பொதுவான மருந்து என்ற யுக்தி சரிபட்டு வராது. மாறாக, ஒவ்வொரு நோயாளியின் மரபணு மாற்றங்களுக்கு ஏற்றவாறு பிரத்யோக மருந்து தயாரிப்பதே சரியாக வரும் என்ற திசையில் பயணிக்கிறார் ஜாஹின்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, அதற்கேற்றவாறு நோயெதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க முயற்சிக்கின்றனர். ஆக, ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு விதமான மருந்து. இந்த மருத்துவ முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்கின்றனர் ஜாஹினும் அவரது மனைவியும். இதனாலேயே ஜெர்மானிய அரசு இவர்களது ஆய்வுக்கு பொருளாதார உதவிகளை செய்கிறது.

ஆண்டாண்டு காலமாக நோயெதிர்ப்பு மருத்துவ முறைகளில் ஜாஹின் செய்து வரும் ஆராய்ச்சியின் பலனாக, தன்னுடைய இந்த மருத்துவ யுக்தி கொரானாவிற்கு தடுப்பு மருந்து உருவாக்கவும் பயன்படலாம் என்பதை கணித்து அத்திசையில் பயணித்து வெற்றியும் பெற்றுவிட்டார். மிக எளிய மனிதராக அடையாளம் காணப்படும் ஜாஹின், ஊடகங்கள் தன்னை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருந்தாலும், புகழை தலைக்கு ஏற்றாமல் மிக கவனமாகவே வார்த்தைகளை கையாள்கிறார்.

பையாண்டெக் கண்டுபிடித்திருக்கும் கொரானா தடுத்து மருந்தை 44,000 பேருக்கு சோதித்து பார்த்ததில் 90% வெற்றியளித்திருக்கிறது. பக்க விளைவுகள் குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. இருப்பினும் இன்னும் அதிகப்படியான தகவல்களை சேகரிக்கவும், ஆய்வும் செய்யப்பட வேண்டும் என்கிறார் ஜாஹின். எல்லாம் நல்லபடியாக நடக்கும்பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் இம்மருத்து பயன்பாட்டிற்கு வரும்.

டாக்டர் ஜாஹின், அவரது மனைவி டாக்டர். Ozlem Tureci மற்றும் மருத்துவ குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

செய்தி திரட்ட உதவியவை:
1. Mustafa Prize Org
2. Codex.
3. Forbes
4. CNBC
5. New York Times.
6. Wikipedia

கட்டுரை ஆக்கம்: நண்பர் ஆஷிக் அஹ்மத்

No comments: