June 1, 2021

கொழும்பு தெஹிவலையில் 2 ஹாபிழ்கள் ஷவ்வால் தலைப்பிறையை கண்டார்களா? - மார்க்க விளக்கம் என்ன?


 

இலங்கையில் இன்று எப்பகுதிகளிலும் ஷவ்வால் தலைப்பிறை தென்படாத காரணத்தினால் ரமழான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை புனித மிக்க நோன்புப் பெருநாள் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.


இந்நிலையில் கொழும்பு, தெஹிவலையில் இரண்டு ஹாபிழ்கள் தமது தொழுகையை முடித்தவுடன் தாம் தொழுது கொண்டிருந்த 03ம் மாடியிலிருந்து தலைப்பிறையை பார்த்ததாக வேறு ஒருவர் பேசும் ஓடியோ பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 


குறித்த ஓடியோவில் பேசும் நபர், தான் தலைப் பிறையை பார்க்க வில்லை என்றும் தனது உறவுக்காரர்களான இரண்டு ஹாபிழ்களே 03ம் மாடியிலிருந்து பிறையை கண்டதாகவும் குறிப்பிடுகிறார்.


மார்க்க அடிப்படையில் தலைப்பிறையை யார் கண்ணால் கண்டார்களோ அவர்கள் தான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சர்சையில் பிறையை காணாத ஒருவர்  வேறு இரு ஹாபிழ்கள் கண்டதாக, அந்த இருவருக்கும் பதிலாக சாட்சியம் வழங்குகிறார். 


பிறையை கண்ணால் பார்த்ததாக கூறப்படும் இரு ஹாபிழ்களும் அவர்கள் பிறையை பார்த்தது உண்மையென்றிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உரிய முறைப்படி தமது சாட்சியத்தை முன்வைக்க வேண்டும். அப்படி அவர்கள் உரிய முறையில் சாட்டியத்தை வழங்காமல் வேறு ஒருவர் கூறும் தகவலை மட்டும் அடிப்படையாக வைத்து நாம் பெருநாளை தீர்மானிக்க முடியாது.

பிறையை கண்டவர்கள் தான் நேரடியாக இறைவன் மீது சத்தியம் செய்து சாட்சியம் வழங்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியொரு சாட்சியம் வழங்கப்படவில்லை. 


அதே வேலை, குறித்த ஓடியோவில் பேசும் நபரை தொடர்பு கொள்வதற்காக சமூக வலைதளங்களில் பகிரப்படும் சுமார் 03க்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்களை 100 தடவைகளுக்கு மேல் தொடர்பு கொண்டும் அதில் 2 தொலை பேசி இலக்கங்கள் முழுமையாக OFF செய்யப்பட்டுள்ளன. 


மற்றைய ஒரு இலக்கத்திற்கு பல தடவைகள் தொடர்பு கொண்ட நிலையில் பல முறை அந்த இலக்கத்திற்கு சொந்தக்காரர் தொடர்பை துண்டித்துக்கொண்டே இருக்கிறார்.  


அதன் பின்னர் போனை அவர் ஆன்ஸ்வர் பண்ணாமல் இருக்கிறார். இந்த நிமிடம் வரை முயற்சித்தும் பலனில்லை. 


இதே வேலை பிறை பார்க்க வேண்டிய நேற்றைய மஃரிபுக்கு பின்னரான நேரம் கொழும்பு, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மேகமூட்டம் காணப்பட்டதுடன் மழையும் பெய்தமை மேலதிக தகவலாகும். 


பிறையை கண்ணால் காணாத ஒருவரின் ஓடியோவை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது என்பதுடன் குறித்த நபரின் தகவலை முழுவதும் புறக்கணிப்பதே மார்க்கத்தின் அடிப்படையாகும். காரணம் பிறையை காணாத ஒருவர் சாட்சி சொல்ல தகுதியற்றவராகிறார்.


உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும். 


அல்குர்ஆன் 17:36


உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பக்கம் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி) நூல்: திர்மிதீ 2442


எனவே, ஆதாரமற்ற வெறும் சந்தேகத்தை மட்டும் உண்டாக்கும் குறித்த ஓடியோவை கணக்கில் கொள்ளத் தேவையில்லை. 


இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ரமழானை 30 ஆக பூர்த்தி செய்யும் வகையில் வியாழக்கிழமையும் நோன்பை நோற்றுவிட்டு வெள்ளிக்கிழமை புனிதமிக்க நோன்புப் பெருநாளை கொண்டாடுவதே மார்க்க அடிப்படையிலான விளக்கமாகும்.

No comments: