June 14, 2021

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? - குர்ஆன் கற்றுத் தரும் அழகிய அறிவியல்.


 
திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உயிருடன் மீண்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நேரத்தில் இது தொடர்பான குர்ஆனிய வழிகாட்டல் பற்றி நாம் இந்நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமறைக் குர்ஆன் 37:142, 21:87, 68:48 ஆகிய வசனங்களில் யூனுஸ் என்ற இறைத்தூதர் மீன் வயிற்றில் சிறை வைக்கப்பட்ட அழகிய அறிவியல்பூர்வமான ஒரு உண்மையை உலகத்தாருக்கு விபரிக்கிறது.

அமெரிக்கரான ஆய்வாளர் திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டு உயிருடன் மீண்ட சம்பவத்துடன் குர்ஆனிய அறிவியலை நோக்கினால் அன்றும், இன்றும் என்றும் குர்ஆன் மட்டுமே அகிலத்தாருக்கு அழகிய வழிகாட்டி என்பதை உள்ளூர நாம் உணர முடியம்.

குர்ஆன் கூறும் வரலாற்றை ஆரம்பமான பார்ப்போம்.

யூனுஸ் தூதர்களில் ஒருவர்.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.

இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.

அல்குர்ஆன் 37:142-145


இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறை வைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.

மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்து விடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான்.

கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.

நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.

மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும் போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித் தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும்.

திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

(அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு விளக்கக் குறிப்பு எண் 395)

நீலத்திமிங்கிலங்களில் உள்ள அறிவியல் தன்மையும் குர்ஆன் கூறும் யூனுஸ் நபியின் அழகிய வரலாறும் குர்ஆனில் அறிவியல் பார்வையை மிக அழகாக எடுத்துரைக்கின்றன.

அமெரிக்க ஆய்வாளரான மைக்கேல் பெக்காட் அவர்களை விழுங்கியதும் ஒரு திமிங்கிலம் தான் என்பதும் மேலதிகமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

No comments: