September 9, 2021

முஸ்லிம் காதி நீதிமன்ற முறை ஒழிக்கப்படப் போகிறது - இறுதியில் என்னதான் மிஞ்சப் போகிறதோ? நம் தலைவர்கள் எங்கே?
ஆங்கிலேயே ஆட்சிக் காலம் தொட்டு சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஆங்கிலேயே அரசுடனேயே போராடிப் போராடி தனித்துவமான பல உரிமைகளை இந்த சமூகத்திற்காக நம் முன்னோர்கள் பெற்றுத் தந்தார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதற்கான மத சுதந்திரம்,

வணக்கத் தளங்களை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம்,

முஸ்லிம் கலாசார பின்னனியுடனான தனித்துவமான பாடசாலைகள்,

ஆடை முறையை பின்பற்றும் சுதந்திரம் என நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து சுதந்திரங்களையும் போராடிப் போராடி பெற்றுத் தந்தார்கள்.

குறிப்பாக முஸ்லிம் குடும்ப வாழ்வியலை மார்க்க அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக அன்றிருந்த நம் முன்னோர்களின் மார்க்க ஞானத்திற்கு உட்பட்டு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட மூலத்தையும் உருவாக்கினார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டம் என்று அறியப்படும் இந்த சட்ட மூலத்தின்படி முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றை நம் மார்க்க வழிகாட்டல் அடிப்படையில் செயல்படுத்திக் கொள்வதற்கு இச்சட்டமூலம் வழி செய்கிறது.

இன்று நடப்பது என்ன?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் சமூக வலைதள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்படும் என்றும் பொது நீதிமன்றங்களில் குடும்பப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக இப்போது அலி சப்ரியை திட்டித் தீர்ப்பதில் எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இன்று ஏற்பட்டுள்ள இந்நிலைக்குறிய காரணம் யார் என்ன பின்னனி? என்பதை நாம் கொஞ்சம் மீட்டிப் பார்க வேண்டும். அப்போது தெரியும் இந்த அநியாயத்திற்கு உண்மையில் யார் பொறுப்பு என்பது.

நாங்கள் தான் இந்த சமூகத்தின் தலைவர்கள் எனக்கூறிக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தின் வரட்டுப் பிடிவாதம் தான் இத்தனை நாசத்திற்கும் காரணம் என்றால் மறுக்க முடியுமா?

இன்று இத்தனை அழிவுகள் நடந்தும் அந்தத் தலைவர்கள் ? எவறும் எதற்கும் வாய் திறப்பதாக தெரியவில்லை. அவர்கள் நாட்டில் இருக்கிறார்களா? என மக்கள் கேட்க்கும் அளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது.

ஆம், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் மற்றும் அதன் முக்கிய சம்பவங்களை சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டுவருவதற்காக ஒரு குழுவை அமைத்தார். முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான அந்தக் குழு தனியார் சட்ட திருத்தங்களை சமூக மட்டத்தில் கலந்துரையாடி முன்வைக்கும் என கூறப்பட்டது.

    இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால் மிலிந்த மொரகொட குறித்த குழுவை நியமிக்கும் போது தேசிய மட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டம் ஒரு பிரச்சினைக்குறியதாகவோ, சர்சைக்குறியதாகவோ இருக்கவில்லை. மிக அழகாக திருத்தங்களை குர்ஆன் சுன்னா அடிப்படையில் கொண்டுவந்து அழகிய முறையில் முடிவு கண்டிருக்கலாம். சட்டமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நம் தலைமைகள் ? என கூறிக்கொண்டிருப்போர் அதற்கு விரும்பவில்லை. மூக்கிருக்கும் வரைதான் சலியும் இருக்கும் என்று சொல்வதைப் போல் பிரச்சினைகள் இருந்தால் தானே தலைவர்களும் இருக்க முடியும் என்கிற மொக்கை தத்துவத்தை உண்மையென நம்பிக் கொண்டு பிரச்சினையை தொடர விட்டார்கள்.

நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களை பொறுத்தவரையில் நாம் அறிந்து இந்த சட்டத் திருத்தத்தை எப்படியாவது சரியாக நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் அதிக கரிசனை காட்டிய ஒருவர் என்பதை மறுக்க முடியாது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பரிந்துரைகள், கருத்துக்களை பெற்றுக் கொண்டு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாகவே கிட்டத்தட்ட நூற்குக்கு 80 சதவீதத்திற்கும் மேல் திருத்தத்தை நிறைவு செய்திருந்தார்.

ஆனாலும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பித்து முடிவு காண முடியவில்லை.

என்ன காரணம்? சமூக மட்டத்தில் கலந்துரையாடி திருத்த சட்டம் ஓரளவுக்கு செய்யப்பட்டிருந்தாலும் நம் சமூகத் தலைமைகள் ? என சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரின் வரட்டுப் பிடிவாதமும், மார்க்கத்தை அறிந்து கொள்ளாத தன்மையும் இன்று காதி நீதிமன்றங்களே ஒழிந்து போகும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டது.

ஆம், முஸ்லிம் தனியார் சட்டம் நபி வழி அடிப்படையில் அமைய வேண்டும் என கூறியிருக்க வேண்டிய  அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை, தனியார் சட்டம் ஷாபி மத்ஹபுக்கு மாற்றமாக வந்து விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தது. இன்றும் இருக்கிறது.

தாம் ஏற்றுக்கொண்டுள்ள ஓர் மத்ஹபுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நபிவழிக்கு கொடுத்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திருக்குமா?

இன்னொரு சாரார், இல்லையில்லை, திருத்தம் ஹனபி மத்ஹபுப்படிதான் அமைய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள்.

முஸ்லிம்களுக்கான குடும்பவியல் சட்டம் நபியவர்களின் வழிகாட்டலில் அமைந்து விடக் கூடாது எங்கள் மத்ஹபுகளின் வழியில் தான் அமைய வேண்டும் என்ற இவர்களின் வரட்டுப் பிடிவாதம் இன்று காதி நீதிமன்றங்களே இல்லையென்ற இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

சில பெண்ணியலாளர்கள், பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்ட சகோதரிகளின் கோரிக்கைகளை நபி வழி அடிப்படையில் ஐந்து நிமிடம் அலசிப் பார்ப்பதற்குக் கூட இவர்கள் விரும்பவில்லை.

நீங்கள் யார் கருத்து சொல்வதற்கு? என தமக்கு மாற்றுக் கருத்துக் கூறிய அனைவரையும் அன்றும் இன்றும் தூக்கியெறிந்து நான் என்ற மமதையில் ஆடியதின் விளைவை இன்று முழு சமூகமும் சுமக்க வேண்டியுள்ளது.

பெண்களுக்கு உரிமை வேண்டும் என கோரியவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மார்க்கத்திற்கு முரனான கோரிக்கைகளும் உண்டு மார்க்கத்திற்கு உட்பட்டவைகளும் உண்டு. மார்க்கம் அனுமதித்தவற்றை ஏற்றுக் கொண்டு மார்க்கம் அனுமதிக்காதவற்றை அவர்களுக்கு விளக்கம் கூறி தெளிவூட்டியிருக்கலாம்.

அப்படி செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தீர்வை கொடுத்திருந்தால் என்றோ இந்தப் பிரச்சினை தீர்ந்திருக்கும். இவர்கள் அதையும் செய்யவில்லை. - செய்யவில்லை என்பதைவிட குறித்த பெண்கள் தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஊடான எந்தவொரு நியாயமான தர்க்கங்களும் இவர்களுக்கே தெரியாது என்பதுதான் யாதார்த்தம்.

2009க்கு பின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதி அமைச்சராக மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். அவர் காலத்தில் அவராவது இதற்கு முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் அவருக்கும் இதில் எந்தத் தேவையும் இல்லை. அவர் எதற்குத் தான் முடிவு கண்டார்? என்கிற கேள்விதானே எப்போதும் எழுகிறது.

தன் கட்சியைக் கூட ஒழுங்கான கட்டமைப்பில் வைத்துக் கொள்ள முடியாதவர் தான் சமூகக் கட்டமைப்பை சரிசெய்வாரா என்ன?

    எழும்பில்லாத நாக்கு எதையும் பேசும், மக்கள் மறதியுள்ளவர்க்ள அவசரமாக மறந்து விட்டு அடுத்த தேர்தலில் எமக்குத்தானே வாக்களிக்கிறார்கள் என்ற அசால்டு நம்பிக்கை அவருக்கு அதிகமே இருக்கிறது.

20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்த மு.க எம்.பி க்களுக்கு நடவடிக்கை எடுத்து ஓரங்கட்டுவோம் என்று சொல்வார். அடுத்த 2 மாதங்களில் அவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் என்பார். இந்த சமூகத்தில் தலையில் மண்ணை அள்ளி மூட்டை மூட்டையாக கொட்டிய 20ம் திருத்தத்திற்கான ஆதரவையே அவர் பெரிதாக நினைக்கவில்லை. காரணம் இந்த மக்களுக்கு எங்களை விட்டால் வாக்களிக்க யாருமில்லை. அடுத்த தேர்தலில் இதே ஆட்கள் இதே கட்சிகளில் வந்து மீண்டும் கோட்டா, மஹிந்த, பசில், நாமல் என்று மேடை தோறும் திட்டித் தீர்ப்பார்கள். பின்னர் அவர்களுக்கே கூஜா தூக்குவார்கள் மக்களும் “சேருக்கு வாக்குப் போடாமல் யாருக்கு போடுவது” என வாக்களித்து விட்டு மீண்டும் பழையபடி திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு தானே?

அதனால் தான் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தை நீதி அமைச்சராக இருந்த போது திருத்தி முடிவு காண வேண்டும் என அவர் தூசுக்கும் நினைக்கவில்லை.

இது பரவாயில்லை. கடந்த 2015ம் ஆண்டும் மைத்திரி - ரனில் ஆட்சி, அதாவது நல்லாட்சி வந்ததே அப்போது நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்து பல முன்னெடுப்புகளை செய்தார்.

அப்போதும் என்ன நடந்தது நினைவிருக்கிறதா?

மிலிந்த மொரகொட அமைத்த நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான முஸ்லிம் தனியார் சட்ட திருத்தக் குழு இதுதான் இறுதித் திருத்தம் என அமைச்சர் தலதா அத்துக்கோரலவிடம் சென்று வழங்கியது.

அடுத்த சில நாட்களிலேயே திருத்தம் அப்படி வரக்கூடாது நாங்கள் சொல்லும் ஷாபி மத்ஹபு அடிப்படையில் தான் வரவேண்டும் இதோ எங்கள் பரிந்துரை என மீண்டும் குட்டையில் கல் எரிந்து அதையும் நாசமாக்கி பெருமையை தமதாக்கிக் கொண்டது ரிஸ்வி முப்தி தலைமையிலான உலமா சபை.

 மொத்தத்தில் இதற்கு தீர்வு வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவு.

 நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வரும் வரை இதே இழுபறியில் அந்த முயற்சியும் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ராஜபக்ஷ ஆட்சி ஏற்பட்டது.

கொரோனாவில் மரணித்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் அவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்துங்கள் என மார்பில் அடித்துக் கொண்டு இந்த முழு சமூகமும் வீதியில் இறங்கி ஒவ்வொரு நாளும் போராடிய நேரத்தில் எமக்கு ஜனாஸாவின் சாம்பலைத் தந்தால் போதுமென இஸ்லாத்தில் இல்லாத சாம்பல் கலாசாரத்தை உண்டாக்கி விட்டார் உலமா சபையின் நிரந்தர தலைவர் ரிஸ்வி முப்தி.

சாம்பலை அடக்குவதற்கு அரசாங்கம் கெஸட் - வர்த்தமானி அறிவிப்பையே வெளியிட்டது. இந்த உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காத பத்வாவும், செயல்பாடுகளும் இலங்கையில் நடந்தது.

இஸ்லாத்திற்கே மாற்றமான சாம்பல் பத்வாவை சரிக்கட்ட பலரும் அதற்காக கூஜா தூக்கியதை நினைத்துப் பாருங்கள். அப்பாவி முஸ்லிம் சகோதரர்கள் சிலர் மார்க்கம் அறியாமல் உடலை எரித்த பின் சாம்பலை கொண்டு சென்று மையவாடிகளில் புதைத்தார்கள். நம் முப்தி மார்க்கத்தில் உள்ளதைத் தான் கூறுகிறார் என நம்பினார்கள்.

ஆனால், முப்தியோ சாம்பல் பத்வாவுக்கும் ஷாபி மத்ஹபின் துணை தேடினார். பாவம், ஷாபி மத்ஹபில் கூட அப்படியொரு வழிகாட்டல் இல்லையென்பது அவருக்கும் தெரியாது. யார் இதையெல்லாம் தேடிப்பார்க்கப் போகிறார்? நாம் சொன்னால் சரியென்று தலையாட்டுவார்கள் என்ற தலைக்கனம் இன்று முழு சமூகத்தையும் நடுத் தெருவில் நிறுத்தி விட்டது.

இப்போதாவது காதி நீதிமன்றங்களுக்காக முப்தியும் அவர் சார்ந்த உலமா சபையும் நீதி கோருவார்களா?

 நாங்கள் தான் இந்த சமூகத்தின் உயர்பீடம் என தங்களைத் தாங்களே பீற்றிக் கொண்டு திரியும், சில லெட்டர்பேட் இயக்கங்கள் என்ன செய்யப் போகின்றன?

 இதற்கும் நாளை வெளிவரும் விடிவெள்ளி பத்திரிக்கையில் அறிக்கையொன்றை வெளியிட்டு விட்டு ஏதோ சிவனொளிபாத மலையை சிலோனை விட்டே அகற்றியது போல பேசிக்கொண்டு திரிவார்கள்.

அன்று பெட்டிக்கடையில் பேசிய வெட்டிப் பேச்சுக்களை இன்று பேஸ்புக்கிலும், வட்ஸ்அப்பிலும் செய்து கொண்டிருக்கிறார்கள் நம் புத்தி(?)ஜீவிகள்.

மொத்தத்தில் புதிதாக எந்தவொரு உரிமையையும் நாம் பெற்றுக் கொள்ளவில்லை. இருக்கும் அனைத்து உரிமைகளையும் வரிசைப்படி இழந்து கொண்டிருக்கிறோம்.

 துருக்கித் தொப்பியை அணிந்து கொண்டு நீதிமன்றத்தில் வாதாட அனுமதிக்க வேண்டும் என அப்போதைய ஆங்கில நீதிபதி லயட்டுக்கு எதிராக நம் முன்னோர்கள் சட்டப் போராட்டம் நடத்தி ஜனநாயக ரீதியில் பிரித்தானியா வரை சென்று குரல் எழுப்பி உரிமையை வென்று வந்தார்கள்.

அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்தளவுக்காவது நம் உரிமையை பாதுகாக்க சட்டப் போராட்டம் நடத்தக் கூடாதா?

என்று தான் விளிக்கப் போகிறோம்?

#இறுதியாக....

தற்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும் என்பதை பகிரங்கமாக அறிவித்து விட்டார். அது எப்படியும் நடக்கத் தான் போகிறது. அவரின் பேச்சில் அதுதான் புலப்படுகிறது.

இருப்பினும், தனக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்து விட்டார்.

தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த ஒரு அரசியல்வாதி இல்லையெனவும், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தவர் எனவும் அமைச்சரவையில் 30 பெரும்பான்மை அமைச்சர்கள் இருக்கும் நிலையில் என்னால் மட்டும் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் தேசிய பட்டியலில் வந்த நான் என்னதான் செய்ய முடியும்? என்ற கேள்வியை எழுப்பி அவரும் ஒதுங்கிக் கொண்டார்.

 காதி நீதிமன்றங்களுக்காக யார் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 எது எப்படியோ சாரத்தை கிழித்து கைக்குட்டை தைக்கும் நிலைக்கு இன்று இந்த சமூகம் மாறியுள்ளது என்பது மட்டும் தெளிவாகி விட்டது.

அல்லாஹ்வே போதுமானவன்!

ரஸ்மின் MIScNo comments: